பக்கம்:மதன கல்யாணி-1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 147

எங்கே இருக்கிறார் என்பதை என்னிடத்தில் சொல்லலாம் அல்லவா?” என்று தனது கண்களைச் சிமிட்டிக் கொண்டு பரிகாசமாகக் கேட்க, அவள் அவனை நோக்கி, “ஓ! அவசியம் சொல்லலாம்; இனி தங்களுக்குத் தெரியாத ரகசியமும் உண்டா? என்னை எப்போதும் ஆண்டு அனுபவிக்க உரிமையுடைய சீமான் இந்த பங்களாவுக்குள் நுழைந்து இந்த சயன அந்தப் புரத்துக்கு வந்தார்; அவர் மகா திருடர்; எல்லாத் திருடரும் சுவரில் கன்னம் வைத்து வழிசெய்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தால், இவர் வழிசெய்து கொள்ளாமலே என்னுடைய இருதயம் வரையில் நுழைந்து விட்டார். இவரை என்ன செய்கிற தென்பது தெரியவில்லை” என்று மிகவும் கொஞ்சலாக மொழிந்தாள்.

அதைக் கேட்ட மைனர் பூரித்துப் புளகாங்கிதம் அடைந்து மோக லாகிரி கொண்டவனாய், கலகலவென்று நகைத்து அவளிடம் இன்னம் சிறிது நெருங்கி உட்கார்ந்து, “வழி செய்யாமல் உள்ளே நுழைந்த கள்ளன் என்றா அவரை நினைக்கிறாய்? அப்படி நினைக்காதே, பாலா! உன் மனதுக்குத் திருப்தியாக என்னென்ன வழி செய்ய வேண்டுமோ அதை எல்லாம் அவர் இப்போதே செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறார். உன் மனதை வெளியிடலாம்; உனக்கு என்னென்ன வேண்டுமோ அவை

களைக் கேட்டுக் கொள்ளலாம்” என்றான்.

பாலாம்பாள், “நான் வேறே எதைக் கேட்கப் போகிறேன்? ஒரு சுவாமியிடம் வரம் கேட்கிறவர்கள் என்ன கேட்பார்கள்? “எப்போதும் உன் காலடியை விட்டு நீங்காத பேரின்ப சுகமான முக்தியைக் கொடு” என்று தான் கேட்பார்கள். அது போல நான் கேட்பது என்னவென்றால், தாங்கள் இன்று இரவு மாத்திரம் எனக்கு உரிமையுடையவர்கள் அல்ல. நான் உள்ள வரையில் தாங்கள் உள்ள வரையில், எப்போதும் நிரந்தரமாக எனக்கு உரிமையுடையவர்களாக இருந்து என்னை அல்லும் பகலும் ஆண்டு அனுபவித்துக் கொள்ள வேண்டும் என்பது தான். இந்த வேண்டுகோளைப் பூர்த்தி செய்வதில் தங்களுக்கு ஆக்ஷேபனை ஏதாகிலும் உண்டோ?” என்று மகா குதுகலமாகப் பேசினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/165&oldid=649606" இலிருந்து மீள்விக்கப்பட்டது