பக்கம்:மதன கல்யாணி-2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 மதன கல்யாணி

இருக்கக் கூடாதென்று அங்கே இருந்து புறப்பட்டு வந்து விட்டேன். எனக்கும் வேறொரு பங்களாவில் அலுவலிருந்த தாகையால், அங்கே போய்விட்டு நான் திரும்பி வந்தபோது, இந்த விபரீதக் காட்சியைக் கண்டேன். நீங்கள் தயவு செய்து ஒரு காரியம் செய்யுங்கள்; இவருடைய சட்டைப்பையில் ஏதாவது கடிதம் இருக்கிறதா என்று பாருங்கள்; கடிதமிருந்தால், அதைக் கொண்டு உண்மை இன்னதென்பதை நீங்கள் நிச்சயித்துக் கொள்ளலாம்” என்றார்.

அதைக் கேட்ட சப் இன்ஸ்பெக்டர், “சரி; அதுவும் நல்ல யோசனைதான்” என்று கூறிய வண்ணம், மதனகோபாலனது சட்டைப்பைகளில் ஒன்றனுள் தமது கையை நுழைத்துப் பார்க்க, அதற்குள் கிடந்த ஒரு காகிதம் கையில் தட்டுப்பட்டது. அதை சப்இன்ஸ்பெக்டர் வெளியில் எடுத்து, அதன் மேல் விலாசத்தைப் படித்தார். அந்த எழுத்து ஒரு ஸ்திரீயினால் எழுதப்பட்ட எழுத்தைப் போலக் காணப்பட்டது. அதன் மேலிருந்த தபால் முத்திரைகளை சப் இன்ஸ்பெக்டர் கவனித்துப் பார்த்தார். அந்தக் கடிதம் தோனாம்பேட்டையிலிருந்து கோமளேசுவரன் பேட்டைக்குத் தபால் மூலமாக அனுப்பப்பட்ட கடிதமென்பது நிச்சயமாகத் தெரிந்தது. அவ்வாறு ஆராய்ச்சி செய்த சப் இன்ஸ்பெக்டர் பசவண்ண செட்டியாரை நோக்கி, “இவருடைய மேல்விலாசமா இது?” என்றார். பசவண்ண செட்டியார், “ஆம்; இவருடையதுதான்” என்றார். அப்போது துரைராஜா சப் இன்ஸ்பெக்டருக்கருகில் நெருங்கி வந்து அந்த எழுத்து யாருடையதென்பதை உற்று நோக்கி, அது தனது தங்கையான கண்மணியம்மாளது எழுத்தென்பதை உணரவே, அவனது முகம் வெட்கத்தினாலும் கவலையினாலும் மாறுபட்டது. அந்தக் கடிதத்திற்குள் எழுதப்பட்டிருப்பது, காதல் சம்பந்தமான விஷயமாக இருந்தால், அது வெளியாவதனால் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் இழிவும் மானஹானியும் வந்து நேருமே என்று நினைத்த துரைராஜா பெரிதும் கவலை கொண்டு தத்தளித்தவனாக நின்றான்; அப்போது சப் இன்ஸ்பெக்டர் பச வண்ண செட்டியாரைப் பார்த்து, “இதைப் பிரித்துப் படிக்கலாம் அல்லவா? இதில் ஏதேனும் ரகசியமான சங்கதி இருக்குமோ என்னவோ?” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/144&oldid=645891" இலிருந்து மீள்விக்கப்பட்டது