பக்கம்:மதன கல்யாணி-2.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 - மதன கல்யாணி

கொடுரமான மரணமும் ஏற்பட்டிருக்கும்; இதுவும் கடவுளின் திருவருள்தான்” என்றார்.

துரைராஜா, “ஆம், தாங்கள் போலிஸ் ஸ்டேஷனில் சொன்ன உறுதியிலிருந்து, இவனும் என்னுடைய தங்கையும் எவ்வித வித்தியாசமான கருத்தோடும் சந்திக்கவில்லை என்பதை நான் நம்பி விட்டேன் இருந்தாலும், இப்படிப்பட்ட இருட்டில், இவர்கள் சந்தித்துப் பேசும்படியான அவ்வளவு முக்கியமான விஷயம் என்னவாக இருக்கலாம் என்று நானும் நினைத்து நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. இன்று இந்த மனிதன் ஒர் உயிரைக் காப்பாற்றுவதற்காக வந்ததாக நீங்களும் சொன்னிகளே; அதுவும் விளங்கவில்லை” என்றான்.

அதைக் கேட்ட பசவண்ண செட்டியார் உடனே மறுமொழி கூறாமல் சிறிது நேரம் மெளனமாக இருந்து, பிறகு மெதுவான குரலில் பேசத்தொடங்கி, “அந்த விஷயம் மிகவும் ரகசியமானது; இந்த நடுப்பாதையில் அதைப்பற்றி நாம் விரிவாகப் பேசினால், எவர் காதிலாகிலும் படும். பகலில் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் பேசவே பேசாதே என்ற வசனம் சொல்லுவார்கள் ஆகையால், அந்த விபரங்களை எல்லாம், நாளைய தினம் உங்களுடைய பங்களாவுக்கு நான் கடிதம் கொண்டு வரும்போது விரிவாகச் சொல்லுகிறேன். மதனகோபாலனுக்கு வந்த இந்தக் கடிதத்தையும் கொண்டு வந்து, உங்களிடத்தில் காட்டுகிறேன். அது வரையில் நீங்கள் சந்தேகமும் கொள்ளக்கூடாது. அதைப்பற்றி அந்தக் குழந்தையிடத்திலாவது உங்களுடைய அத்தையிடத்திலாவது வேறு இதராளிடத்திலாவது பிரஸ்தாபம் கூடச் செய்யக் கூடாது. நீங்கள் எனக்கு இந்த வாக்குறுதி செய்து கொடுத்தால், நான் நாளைய தினம் உங்களுடைய பங்களாவுக்கு வந்து, உங்களுடைய மனம் திருப்தியடையும்படி உண்மையெல்லாம் சொல்லுகிறேன்” என்றார். துரைராஜா, “அப்படியே ஆகட்டும். நாளைக்கு உங்களை எத்தனை மணிக்கு எதிர்பார்க்கலாம்?” எனறான.

செட்டியார், “உங்களுடைய செளகரியப்படி நான் வரக் காத்திருக்கிறேன். நீங்கள் பங்களாவில், எது முதல் எதுவரையில் இருப்பீர்கள்?” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/150&oldid=645901" இலிருந்து மீள்விக்கப்பட்டது