பக்கம்:மதன கல்யாணி-2.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 மதன கல்யாணி

கோமளவல்லி:- (நயமாகவும் அன்பாகவும்) என்ன அக்கா! என்னிடத்தில்கூட நிஜத்தைச் சொல்லக்கூடாதா? கொஞ்ச நேரத்துக்கு முன் தாதி குப்பம்மாள் உன்னிடத்தில் நெருங்கி நிற்பது போல இருந்து ஒரு கடிதத்தை ரகசியமாக உன்னுடைய வயிற்றுப் பக்கமாகப் புடவைக்குள் சொருகினாள்; அதை நான் கவனிக்கி றேனா இல்லையா என்பதை அறியும் பொருட்டு நீ என்னை உற்றுப் பார்த்தாய்; அதன் பிறகு அந்த நாவல் புஸ்தகத்தை எடுத்துப் பிரித்து, அதற்குள், அந்தக் கடிதத்தை வைத்துக் கொண்டு படித்துவிட்டு அதை ஒளித்து வைத்தாய். இது வரையில் நிரம்பவும் விசனமாக இருந்த நீ கடிதத்தைப் படித்தது முதல் மிகவும் குதுகலமாகப் பேசுவதோடு, நாங்கள் எல்லாரும் அன்னியர்கள் போலவும், எங்களுக்கும் உனக்கும் இனி எவ்வித சம்பந்தமும் இல்லாமல் போய்விட்டது போலவும் புது மனுஷி போல ஒருவித வேற்றுமையாகவும் பேசுகிறாய். நீ இது வரையில் என்னிடத்தில் கபடமில்லாமல் பேசுவாய்; இப்போது ஏன் இப்படி இருக்கிறாய்? அந்தக் கடிதம் எங்கே இருந்து வந்தது? அதில் இருந்த சந்தோஷ சங்கதி என்ன? எனக்குச் சொல்லக்கூடாதா?

துரைஸானி:- நீ தான் பெரிய சிப்பாயாயிற்றே; ஜெயில் கைதியைக் காக்கிறது போல, நீ இங்கே வந்து என் மேல் பாராக் கொடுத்துக் கொண்டிருக்கும்படி அம்மாள் செய்திருக்கிறார்களே. அப்படி இருக்க, உன்னை நான் பழைய கோமளவல்லியாக நினைத்து நம்பி எப்படி உண்மையைச் சொல்லுகிறது; எனக்குக் கடிதம் வந்தது உண்மை தான்; அதை நான் உனக்குக் காட்டாமல் மறைத்ததும் நிஜந்தான். ஆனால், உன்னைப் போல இவ்வளவு கபடமற்ற மனிஷியை நான் இந்த உலகத்திலேயே பார்த்ததில்லை; நீ இந்த இரண்டு நாளாக இங்கேயே இருக்கிறாய்; எனக்கு உடம்பு அசெளக்கியமாக இருப்பதால், நான் வெளியில் போகாமல் இங்கேயே இருக்கும்படி நீ பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அம்மாள் உனக்குச் சொல்லியிருப்பதை உண்மை என்றே நீ இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறாய். அப்படி இருக்க, குப்பம்மாள் என்னிடத்தில் கடிதம் கொடுத்ததையும், அதை நான் மறைத்துப் படித்தேன் என்பதையும் மாத்திரம் நீ எப்படிக் கண்டு கொண்டாய்! அது தான் எனக்கு நிரம்பவும் ஆச்சரியமாக இருக்கிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/274&oldid=646139" இலிருந்து மீள்விக்கப்பட்டது