பக்கம்:மதன கல்யாணி-2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மதன கல்யாணி

திருடர் என்று கைதியாக்கின புத்திசாலித்தனத்தைப் போலத் தான், கேள்வி கேட்டும் புத்திசாலித்தனமும் இருக்கிறது. ஒரு பெண் பிள்ளையும், ஒரு யெளவனப் புருஷரும் நடுஇரவில் தங்களுடைய படுக்கை அறையில் இருக்கலாமா? அது தவறான காரியந்தான்; இனிமேல், புருஷனும் பெண்ஜாதியும் படுக்கை அறைக்குப் போவதற்கு முன் ஒவ்வொரு நாளும் போலீசாரிடத்தில் லைசென்ஸ் வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்று உத்தரவு செய்து விடுங்கள். லைசென்ஸ் இல்லாமல் படுக்கையறையில் காணப்படும் புருஷரை எல்லாம் திருடர்கள் என்று பிடித்துக் கொள்ளலாம்” என்றாள். அதைக் கேட்ட ஜனங்கள் யாவரும் கோவெனக் கூக்குரலிட்டுக் கைக்கொட்டிச் சிரித்துப் போலீசாரைப் புரளி செய்யத் தொடங்கினர். அப்போது சப் இன்ஸ்பெக்டருக்கு ரெளத்திராகாரமான கோபம் பொங்கி எழுந்தது; மீசை துடித்தது; கண்கள் கோபத்தினால் சிவந்தன, என்றாலும், சப் இன்ஸ்பெக்டர் ஏராளமான ஜனக்கும்பலிருந்ததைக் கருதி தமது கோபத்தையும் அவமானத்தையும் அடக்கிக் கொண்டு அவளை நோக்கி,

“அப்படியானால், இவர் உன்னுடைய புருஷரா?” என்றார்.

உடனே பாலாம்பாள் கோபமடைந்தவள் போலக் காட்டிக் கொண்டு, “இது என்ன மூடக் கேள்வி? நான் தான் இவர் திருடர்களைச் சேர்ந்தவரல்ல என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட்டேனே அதன் பிறகு இவர் புருஷனா என்று கேட்கலாமா? இவர் திருடரா இல்லையா என்பதை நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியமான சங்கதி; அதைத் தெரிந்து கொண்டு விட்டீர்கள்; அதன் பிறகு இவர் புருஷரா அல்லது ஆசை நாயகரா என்பது போன்ற கேள்விகளைக் கேட்பது, எங்கள் இருவரையும் இத்தனை ஜனங்களுக்கெதிரில் அவமானப்படுத்துவதைத் தவிர வேறல்ல” என்றாள்.

அதைக் கேட்ட சப் இன்ஸ்பெக்டர் மிகவும் குழம்பிப் போய் நாடகக்காரக் கிழவனுடைய முகத்தைப் பார்க்க, அவன் பிணம் போல அநேகமாகச் செத்துப்போய் நின்று கொண்டிருந்தான். அதன் பிறகு கொஞ்ச நேரம் ஏதோ யோசனை செய்த சப் இன்ஸ்பெக்டர் அவளை மிகவும் கம்பீரமாகப் பார்த்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/68&oldid=646316" இலிருந்து மீள்விக்கப்பட்டது