பக்கம்:மதன கல்யாணி-3.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 243 உடனே ஜனங்கள் எல்லோரும் அந்தப் பக்கத்தில் திரும்பிப் பார்க்க, அவர் யாரோ புதிய மனிதராகக் காணப்பட்டார்; அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று எல்லோரும் ஆவலுற்று அவரது வாயை நோக்கியிருக்க, அந்த மனிதரை அப்போதே பார்த்த சிவஞான முதலியார் திடுக்கிட்டுப் பேரச்சம் கொண்டார். அந்த மனிதர் சைதாப்பேட்டை அண்ணாமலை முதலியார் என்பதைக் கண்ட சிவஞான முதலியாருக்குக் குலைநடுக்கம் எடுத்தது. மூளை குழம்ப, அறிவு மழுங்கியது; தலை கிறுகிறென்று சுழன்றதால், அவர் எழுந்திருக்க மாட்டாமல் நாற்காலியில் சாய்ந்து விட்டார் ஆனாலும், அவரது முகம் அண்ணாமலை முதலியாரைப் பார்த்து விஷயத்தை வெளியிட வேண்டாம் என்று சைகை காட்டுவதுபோல இருந்தது; அவரது விபரீதமான நிலைமையைக் கண்ட எல்லா ஜனங்களும் பெருத்த வியப்பும் திகைப்பும் அடைந்து மாறி மாறி சிவஞான முதலியாரையும் அண்ணாமலை முதலியாரையும் கவனிப்பாக நோக்கியபடி பேச்சு மூச்சின்றி உட்கார்ந்திருந்தார். அப்போது சைதாப்பேட்டை அண்ணாமலை முதலியார், "ஐயா மார்களே! நான் இருப்பது சைதாப்பேட்டை, வக்கீல் சிவஞான முதலியார் என்னைத்தான் அண்ணாமலை முதலியார் என்றும், தம்முடைய நண்பர் என்றும் குறித்தது. இன்றைய தினம் ஒரு விருந்து நடத்தப் போவதாகவும், அவருடைய குழந்தைகளை நெடுங்காலம் வளர்த்த நன்றி விசுவாசத்தைக் காட்டும் பொருட்டு என்னையும் இந்த விருந்துக்கு அழைப்பதாகவும் சொல்லி, நான் அவசியம் வரவேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்கள். அதன் பொருட்டு இன்றைய தினம் இங்கே வந்தேன். வந்த இடத்தில் இப்போது சிவஞான முதலியாரும், அருணகிரிப் பிள்ளையவர்களும் பேசியதைக் கேட்டவுடன், சங்கதி பெருத்த மோசடியாக இருக்கிறது. நான் இங்கே வந்திருக்கிறேன் என்பதை அறியாமல் சிவஞான முதலியார் அப்படிப் பேசினாரா அல்லது மறதியினால் அப்படிப் பேசினாரா என்பது தெரியவில்லை. இந்த முதலியாருக்கும் எனக்கும் நெடுநாளையப் பழக்கமுண்டு. சுமார் பதினைந்து வருஷத்துக்கு முன், இவர் இரண்டு குழந்தைகளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/246&oldid=853389" இலிருந்து மீள்விக்கப்பட்டது