உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தக் கடவுள் தானா ?

11


உயர்ந்த இனங்கள், தங்களைத் தாழ்ந்த இனங்களாகப் படைக்காததற்காகக், கடவுளுக்கு நன்றியறிதல் தெரிவிக்க வேண்டாமா? ஆம்; தெரிவிக்க வேண்டும் என்று நாம் கூறினால், பிறகு நான் மற்றொரு கேள்வி கேட்கிறேன் தாழ்ந்த இனங்கள், தாங்கள் உயர்ந்த இனங்களாக ஆக வில்லை என்பதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்தவேண்டுமா? அல்லது அவர்கள், தங்களை விலங்குகளாகப் படைக்கவில்லையே என்பதற்காகக், கடவுளுக்கு நன்றி தெரிவிக்கவேண்டாமா?

கடவுள், இந்தப் பல்வேறு வகைப்பட்ட இளங்களைப் படைத்தபொழுதே உயர்ந்த இனம் தாழ்ந்த இனத்தை அடிமைப்படுத்தும் என்பதை அறிவார்; தாழ்ந்த இனத்தினர் கைப்பற்றப்படுவர், இறுதியில் அழிக்கப்படுவர் என் பதையும் அறிவார்!

கடவுள் இதைச் செய்தார் என்றால், சிந்தப்படப் போகும் குருதி வெள்ளத்தை அவர் அறிந்தார் என்றால், தாங்கப்போகும் வேதனைகளை அவர் அறிந்தார் என்றால், வெட்டப்பட்ட பிணக் குவியல்கள் கணக்கற்ற வயல்களில் நிரம்பிக்கிடந்ததை அவர் பார்த்தார் என்றால், அடிமை களின் குருதி ஒழுகும் முதுகுகளை அவர் கண்டார் என்றால், குழந்தைகளை யிழந்த தாய்மார்களின் உடைந்த இதயங்களை அவர் நோக்கினார் என்றால், இவையெல்லாவற்றையும் அவர் பார்த்தார்.

பார்த்தார் அறிந்தார் என்றால், அவரைவிட வேறு கொடூரமான 'பூதத்தை' நாம் கருதிப்பார்க்க முடியுமா?

பின் ஏன் நாம் சொல்லவேண்டும், கடவுள் நல்லவர் என்று?