உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

மதமும் மூடநம்பிக்கையும்


அழுத்தமான சுவர்களுக்கிடையிலே, உறுதியும் உள்ளன்பும் கொண்ட மாவீரர்கள், தங்கள் இறுதி மூச்சை விடும்படி செய்யப்பட்ட இருட்டறைகள்; சிறந்தவர்களின் குருதிக்கறை படிந்து, அதனால் புகழடைந்த தூக்குமரங்கள்; தழும்புகள் ஏறியும், குருதியைக் கசியவிட்டுக்கொண்டும் காணப்பட்ட முதுகுகளையுடைய அடிமைகள்; தீச்சுடரையே ஆடையாக உடுத்திக்கொண்டு, உண்மைக்காக உயிர் நீத்த உத்தமர்கள் ; முள்ளாணிப் பலகையில் சித்ரவதைச் செய்யப்பட்ட மேலோர்கள்; மூட்டுகள் கழற்றப்பட்டுத் தசைகள் கிழிக்கப்பட்டவர்கள்: கிழிக்கப்பட்டவர்கள்: நீதிமான்களின் வெட்டப்பட்ட தலைகள், குருதி ஒழுகிய உடலங்கள்; உண்மைக்குப் பரிந்து பேசியோரின் பிடுங்கப்பட்ட கண்கள்; போராடிப் போராடி எந்தப் பலனும் பெறாமல் மாண்டொழிந்த எண்ணற்ற நாட்டுப் பற்றுடையோர் : தொல்லைகள் கொடுக்கப்பட்டு, அடிக்கப்பட்டுக் கண்ணீர் வடித்து வடித்துக் காலந் தள்ளிய மனைவிமார்கள்; ஒதுக்கித் தள்ளப்பட்ட குழைந்தைகளின் நடுங்கும் முகங்கள்; இறந்த காலங்களில் கொன்று குவிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள்; கொடுங்காற்றுக்கும் பேரலைக்கும் அகப்பட்டுச்செத்தொழிந்தோர்; வெள்ளப்புனலுக்கும் வெந்தழலுக்கும் இரையானோர்; கொடிய விலங்குகளுக்கு உணவானோர்; பேரிடியால் தாக்கப்பட்டோர்; எரிமலையின் நெருப்புக் குழம்பில் பட்டெறிந்தோர்; பஞ்சத்தில் அடிபட்டோர் ; பிளேக் நோயால் பாதிக்கப்பட்டோர்; தொத்து நோயால் தொல்லைப்பட்டோர் ; குருதியைக் குடித்துக் கொப்பளித்த வாய்கள்; நஞ்சை ஏந்தியிருந்த நச்சுப்பற்கள்; பல உயர்ந்தவர்களின் உடலில் காயங்கள் உண்டுபண்ணித், தசைகளைக் கிழித்தெறிந்த அலகுகள்; கோழைத்தன்மையின் வெற்றிகள் ; குற்றத்தின் கோலோச்சும் வெறித்-