உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

மதமும் மூடநம்பிக்கையும்


மனிதன், அதில், தன்னுடைய உருவத்தைக் கண்டுகொள்கிறான். இயற்கைக்கு மீறிய தன்மையை யுடையதாகக் கருதப்படும் மதங்களெல்லாம், கண்ணாடிக்குப் பின்புறம் உள்ள உருவத்தையும் கண்டுகொள்வதாகப் பாசாங்கு செய்கின்றன !

ஆத்மீக நெறியில் நின்று. தத்துவக் கருத்துக்களைக் கூறும் தத்துவ ஆசிரியர்களெல்லாம், பிளாட்டோவிலிருந்து ஸ்வீடன் போர்க் வரையில். எல்லோரும் உண்மைகளை உற்பத்தி செய்தே கொடுக்கின்றனர்; மதங்களைக் கண்டுபிடித்தவர்களும் அதே செயலைத்தான் செய்திருக்கிறார்கள்!

எல்லையற்ற கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றே வைத்துக்கொள்வோம்; அவருக்காக நாம் என்ன செய்யவேண்டும்? அவர் எல்லையற்ற தன்மை கொண்டவராதலால், அவர் கட்டுப்பாடற்றவராகிறார்; அவர் கட்டுப்பாடற்றவராகிறபடியினால், அவர் நன்மைபெறச் செய்யவோ, தீமை பெறச் செய்யவோ முடியாது. அவருக்குத் தேவை எதுவும் இல்லை. அவர் எல்லாவற்றையும் கொண்டிருக்கிறார்!

எல்லையற்ற பரம்பொருள், தன்னுடைய புகழ்ச்சியை விரும்புகிறது என்று ஒரு மனிதன் நம்பியிருப்பது, எவ்வளவு தற்பெருமைத்தனமாகும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் !

நம்முடைய மதம் சாதித்தது என்ன? மற்றைய மதங்கள் எல்லாம் தவறுடையன, நாம் நம்முடைய மதத்தைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டால் போதும் என்று கிருத்தவர்கள் கூறுகிறார்கள்: கிருத்தவ மதத்தைப்பற்றி மட்டுமே ஆராய்வதை ஒப்புக்கொள்கிறார்கள். அந்த அளவுக்கே நாமும் ஆராய்ந்து பார்ப்போம் !