உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எப்படிச் சீர்திருத்துவது?

31


அவர்கள், மக்கள் நன்றாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ, அவர்களால் இயன்ற மட்டும் செய்து பார்த்தார்கள்; இப்படியெல்லாம் இருந்தும் அவர்கள் வெற்றியடையவில்லை!

ஏன் சீர்திருத்தக்காரர்களெல்லாம் தோல்வியுற்றனர்? ஏன் தோற்றனர்? என்பதை நான் கூறுகிறேன்.

அறியாமை, வறுமை, தீமை ஆகியவைகள் உலகில் நிரம்பிக்கொண்டிருக்கின்றன. சாக்கடையே மருத்துவமனையாக விளங்குகிறது. தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலையில், தங்கள் குச்சி வீடுகள் குடிசைகள் குகைகள் ஆகியவற்றைக் குழந்தைளால் நிரப்புகின்றனர். அவர்கள், 'ஆண்டவனையும்' 'அதிர்ஷ்டத்தையும்' 'தருமத்தையும்' நம்பியிருக்கின்றனர். நிகழ்ச்சிகளுக்கான காரணங்களைப்பற்றிச் சிந்திப்பதற்கோ, அல்லது பொறுப்புணர்ச்சியைப்பற்றி உணர்ந்து கொள்வதற்கோ, சிறிதும் அறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள். அதே சமயத்தில் அவர்கள் குழந்தைகளை விரும்புவதில்லை; னென்றால், குழந்தை ஒரு 'சாபக்கேடு'-அதற்கும் அவர்களுக்கும் 'சாபக்கேடு' என்று எண்ணுகின்றனர். குழந்தை யாராலும் வரவேற்கப்படுவதில்லை; ஏனென்றால், அது ஒரு சுமையாகக் கருதப்படுகிறது. இப்படி வேண்டப்படாத குழந்தைகள் தான், சிறைக்கூடங்களையும் காவற்கூடங்களையும், வைத்திய சாலைகளையும், பைத்திய சாலைகளையும், கொலைக்களங்களையும் தூக்குமரங்களையும் நிரப்புகின்றனர். ஒரு சிலர்தான் எதிர்பாராத தன்மையாலோ அல்லது ஆதரவு கிடைத்த முறையாலோ இவற்றினின்றும் தப்பி வெளியேறுகின்றனர்; ஆனால் பெரும்பான்மையோர் அவற்றினின்றும் மீளமுடியாமல், மாண்டொழிகின்றார்கள். அவர்கள் எத்தி நடப்பதாலும், வலிவு காட்டுதலானும்