உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

மதமும் மூடநம்பிக்கையும்


பிழைப்புக்கு வழி தேடிக்கொள்கிறார்கள். அவர்கள், தாங்கள் கற்ற கெட்ட வொழுக்கங்களைத் தங்கள் குழந்தைகளுக்குகும் கற்றுக் கொடுக்கிறார்கள்.

இப்படிப்பட்ட தீமைகளுக்கு எதிரில் சீர்திருத்தத் தொண்டுகள்—முயற்சிகள் வலிவற்றனவாகி விடுகின்றன. 'தருமம்' செய்தல் என்பது. ஒருவிதத்தில், நம்மையறியாமலேயே, குற்றத்தை வளர்க்கும் கருவியாக ஆகிவிடுகிறது!

தோல்வி, இயற்கையின் அடையாளக் குறிபோலும்! ஏன்? இயற்கை ஒரு வரையறுக்கப்பட்ட எடுத்துக் காட்டையோ, அறிவையோ கொண்டிருக்கவில்லை; இயற்கை 'நோக்கம்' இல்லாமல் உற்பத்தி செய்கிறது; 'குறிக்கோள்' இல்லாமல் நிலைநிறுத்துகிறது; 'எண்ணம்' இல்லாமல் அழிக்கிறது! மனிதன் சிறிதளவு அறிவைப் பெற்றிருக்கிறான்; அதனை அவன் பயன்படுத்த வேண்டும். மனித சமுதாயத்தை நெம்பிவிடுவதற்கான தூண்டுகோல், அறிவுடைமையேயாகும்!

நம் முன் நிற்கும் முக்கிய கேள்வி, அறியாமையும், வறுமையும், தீமையும், தங்கள் குழந்தை குட்டிகளோடு உலகை நிரப்பிக் கொண்டிருப்பதை, நம்மால் தடுத்து நிறுத்த முடியுமா? என்பதுதான்.

அறியாமையும் தீமையும் என்ற மிஸௌரி ஆறு, நாகரிகம் என்ற மிஸிஸிபி ஆற்றில் விழாதவாறு தடுத்து நிறுத்த நம்மால் ஆகுமா?

இந்த உலகம், எப்பொழுதும், அறியாமை உணர்ச்சிக்கு இரையாகிக்கொண்டு தானிருக்க வேண்டாமா? நிகழ்ச்சிகளுக்கான காரணங்கள், எல்லா மக்களாலும் கண்டறிந்து கொள்ளும்படியான அளவுக்கு, இந்த உலகம் நாகரிகப்படுமா?