உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தக் கடவுள் தானா ?

5


குற்றவாளியையும், மடயனையும், பைத்தியக்காரனையும் இவர் தோற்றுவிக்கக் காரணம் என்ன?

எல்லையற்ற பேரறிவும் - பேராற்றலும் கொண்ட இவர், குறைபாடுகளைத் தோற்றுவித்ததற்கு எந்தச் சமாதானமாவது கூறமுடிகிறதா?

இந்தக் குறைபாடுகளெல்லாம், இவற்றைப் படைத்த ஆண்டவனுக்கு விருப்பமளிக்கவா வந்திருக்கின்றன?

இரண்டாவதாக – எல்லையற்ற ஒரு பெருங் கடவுள் இவ்வுலகத்தை ஆளுகிறாரா?

படைத்தலைவர்களும் பாராளும் மன்னர்களும், பேரரசர்களும் பேரரசிகளும் வாழ்வதற்கு இவர்தான் பொறுப்பாளியா?

தொடுக்கப்படும் எல்லாவித போர்களுக்கும், கொட்டப்படும் எல்லாவகைக் குற்றமற்றவர்களின் குருதிக்கும் இவர் தான் பொறுப்பாளியா?

பன்னெடும் நூற்றாண்டுகளாக இருந்துவரும் அடிமை வாழ்விற்கும். சாட்டையடியால் தழும்புகள் ஏறிநிற்கும் முதுகுகளுக்கும், தாய்களின் அணைப்பிலிருந்து பிடுங்கப் பட்டு விற்கப்படும் குழந்தைகளுக்கும், பிரிக்கப்பட்டுச் சீரழிக்கப்படும் குடும்பங்களுக்கும் இவர்தான் பொறுப்பாளியா?

மதக் குற்றச்சாட்டுக்கும், மத விசாரணைக் குழுவுக்கும், விரல்களை நெரித்துக் கசக்கிடும் விரலாணிக்கும். உடல் முழுதும் புண்ணாக்கிடும் இருப்பு முட்பலகைக்கும் இந்தக் கடவுள் தான் பொறுப்பாளியா?

உறுதியாளரையும் உயர்வாளரையும் அழிக்க, கொடுமையையும் கீழ்மையையும் இந்தக் கடவுள்தான் அனுமதித்தாரா?