உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தக் கடவுள் தானா ?

7


எல்லையற்ற பேரருளாளர்தான் கூரிய அலகையும் — நகத்தையும், நச்சுப் பல்லையும் — கொடுக்கையும் கண்டு பிடித்து, அவற்றை உற்பத்திச் செய்தாரா?

எல்லையற்ற நற்பண்பாளர்தான், இரையைக் கொத்தித் தூக்கிச் செல்வதற்கு ஏற்றவண்ணம் கழுகுகளின் இறக்கைகளைப் பக்குவப்படுத்தி வைத்தாரா?

எல்லையற்ற நற்பண்பாளர்தான், வலிவற்றனவும், உதவியற்றனவுமான விலங்கு குகளைக், கொன்று உண்ண வேண்டும் என்று, கொடிய விலங்குகளைப் படைத்தாரா?

எல்லையற்ற நற்பண்பாளர்தான், கணக்கற்ற சாதாரண உயிர்க் கிருமிகள், அவைகளைக் காட்டிலும் உயர்ந்த உயிரினங்களின் சதையைத் தின்று, அதிலேயே வாழ்ந்து. அதிலேயே வளரவேண்டும் என்று அவைகளைப் படைத்தாரா?

எல்லையற்ற பேரறிவாளர்தான், கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய கிருமிகள். கண்களிலுள்ள நரம்புகளைத் தின்று வாழவேண்டும் என்று, அவைகளை உற்பத்திச் செய்தாரா?

ஒரு நுண்ணிய கிருமியின் வயிற்றுப் பசியைப் போக்குவதற்கு ஒரு மனிதனைக் குருடனாக்கும் தன்மையை ஓர்ந்து பார்மின் !

உயிர் உயிரைத்தின்று வாழ்வதைச் சிந்தித்துப் பார்மின்! இரையாகும் எண்ணற்ற இரைகளைச் சிந்தித்துப் பார்மின் ! கொடுமையின் பீடத்தில் நையகாரா நீர்வீழ்ச்சி போன்று சொரியப்பட்ட குருதி வெள்ளத்தைச் சிந்தித்துப் பார்மின் !