பக்கம்:மந்தரை சூழ்ச்சி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

மந்தரை சூழ்ச்சி



எய்தினாளே, இராமனைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவள் கால்களை விரைவாக நடக்கத் துாண்டினவே, கூனியிருந்தும், விரைவில் நடக்க இயலாவிட்டாலும், கோபத்தைத் துணையாகக் கொண்டு விரைந்து நடந்துவிட்டாளே. அவள் அதுபோல் அவசர அவசரமாகக் கைகேயியைத் துயிலுணர்த்தினாளா ? இல்லை. அப்படிச் செய்தல் தவறு என்று அறிவாள். அதனால்,

எய்தி, அக் கேகயன் மடந்தை ஏடவிழ்
நொய்தலர் தாமரை தோற்ற நோன்பினால்
செய்தபேர் உவமைசால் செம்பொன் சீறடி
கைகளின் தீண்டினாள் காலக் கோளனாள்

கைகேயி துரங்கும்பொழுதுகூட அவள் கண்களிலிருந்து அருள் சொரியும். ஆதலால் தனது தீய எண்ணத்தை வெகு ஜாக்கிரதையாகவே கூறி அவள் மனத்தைக் கலைக்க வேண்டும்; அதனால் மெதுவாகவே கூனி கைகேயியின் சீறடிகளைக் கைகளால் தொட்டாள். தொடவே செய்தாள், தன் கைமலர் முழுவதும் அவள் பாதத்தில் படும்படி வைத்தாளில்லை. அவள் மெதுவாகத் தொட்டது நன்மை விளைக்காமல் தீமையே விளைக்கப் போவதால் பாம்பு தீண்டுவது போல் தீண்டினாள் என்று கூறினார். பாம்புவருவதும் தீண்டுவதும் யாரும் முன்கூட்டி அறியார்.

சாதாரணமாகத் தொட்டால் உடனே துாக்கம் கலையாமல் இருக்கலாம். ஆனால் பாம்பு தீண்டிவிட்டாலோ விழியாமல் இருக்கமுடியாது. அதுபோல் தீண்டலும் உணர்ந்தனள் கைகேயி. ஆயினும் கண் விழிக்கவில்லை. அந்த அரவு இட்ட முத்தம் அவ்வளவு குளிர்ந்திருந்ததோ?

தீண்டலும் உணர்ந்தஅத் தெய்வக் கற்பினாள்
நீண்டகண் அனந்தரும் நீங்கு கிற்றில்ன்.

ஆதலால் கூனி,