பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 அ.ச. ஞானசம்பந்தன் இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் இது வரையில் பேசுகின்றவர்கள் 'ஒளி' என்றுதான் சொல்லிக் கொண்டு வந்தார்கள். முதன் முதலாக ‘எங்கும் ப்ரகாசமாய் அருளொடு நிறைந்தது' என்பதாக அருளை அந்த ஒளிக்கு அடையாகச் சேர்த்த பெருமை தாயுமானவப் பெருந்தகையைச் சேர்ந்ததாகும். அதனை அடியொற்றி வந்தவராகிய வள்ளற்பெருமான் அருட்பெருஞ்சோதி என்ற ஒரு அற்புதமான சொற்றொடரைத் தருகின்றார். அரு ளொடு நிறைந்திருக்கிற பெரும் சோதி வடிவானவன் பரம்பொருள் என்ற கருத்தைப் பேசிய பெருமை அவருக்குரியதாகும். சித்தர்களுக்குத் தனியான சில சிறப்புகள் உண்டு. ஏனையோரைப் போல கல்வி முதலியவற்றை வரன்முறையாகக் கற்று பாடல்கள் எழுதியது இல்லை. எந்தப் பிறப்பிலேயோ செய்ய வேண்டிய அனைத்தை யும் செய்து முடித்துவிட்டு இறுதியாக இந்தப் பிறப்பிலே எல்லாவகையான சித்திகளும் கைவரப் பெற்ற சித்தர்களாகத் தோன்றி மலர்கின்றார்கள். எனவே ஏனையோரைப் போல கல்வி முதலியவற்றை வரன்முறையாகக் கற்கவேண்டிய தேவை இவர்களைப் பொறுத்தமட்டில் இருக்கவில்லை. ஆனால் வரன் முறையான கல்வி இல்லையே தவிர கற்பனவும் இனி அமையும் என்று சொல்லுகின்ற முறையிலே எந்த அளவுக்கு எந்தத் துறையில் அறிவு செல்லக்கூடுமோ அந்த அளவுக்கு அந்தந்தத் துறையில் அறிவு செல்லக் கூடிய பேராற்றல் படைத்த பெருமக்கள் ஆவார்கள் இவர்கள்.