பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கிழக்கும் மேற்கும் 55


பழக்கவழக்கங்களையும் விடுவதில்லை. ஜப்பானியர் போன்று தனிமனிதரை உபசரிக்கும் உயர்வான நிலையை உலகில் வேறு எங்கும் காண இயலாது. விருந்தினரை அழைத்துத் தேநீர் அளிப்பதனால் அதனைத் "தேநீர் விழா' (Tea Ceremony) என்று பெயரிடும் அளவு அவர்கள் பழைமையைப் போற்றி வாழ்கின்றார்கள். கொடுப்பதென்னவோ ஒரு கிண்ணத் தேநீர்தான். ஆனால், அந்தத் தேநீர் விழாவில் விருந்தினரை உயரமான ஆசனத்தில் அமரச் செய்து தாங்கள் ஒருபடி தாழ்வாக உள்ள ஆசனத்தில் அமர்ந்து தேநீர் வழங்குவர். விருந்து உபசரிக்கும் அவர், விருந்து உண்பவரைவிடப் பொருள் வளத்தால் பல நூறு மடங்கு உயர்ந்தவராகக்கூட இருப்பார்; என்றாலும், அவர்கள் தனி மனித உபசாரத்தில் எவ்வளவு சிறந்து நிற்கின்றார்கள் என்பதற்காக இதைச் சொல்கின்றேன். புத்த தேவன் காலத்தில் தோன்றிய பழக்கத்தை அவர்கள் இன்றைக்கும் ஏற்றுச் செய்கின்றார்கள்.

இதனை நோக்குகையில், அவர்களது பண்பாட்டில் - நாகரிகத்தில் ஏதோ அடிப்படையான வேறுபாடு இருக்கத்தான் வேண்டும் என்பது தெரியவருகிறது. வாழ்க்கை முறையில் எவ்வெவற்றை வாழ்வின் குறிக்கோள்கள் என ஒரு சமுதாயம் ஏற்றுக் கொண்டுள்ளதோ அவற்றை மறவாமல் - ஆனால், அதே நேரத்தில் வாழ்வில் முன்னேறுகின்ற அடிப் படையைக் காணுகின்றோம். எங்கிருந்து வந்தது இப் பழக்கம் என்று ஆராய்வோமானால் அது பயனுடையதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.