உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

மனத்தின் தோற்றம்



5.5 கொங்கைக் குடம்

கெளசிகன் என்னும் மன்னன் அக்கமாதேவி என்னும் பெண்ணைத் தனிமையில் கண்டு, நெருப்பில் உருகிய அரக்கு போல உள்ளம் உருகி, பூங்கொடியே காமக் கடலை நான் கடப்பதற்கு உன் கொங்கையாகிய குடத்தைத் தருவாயாக என்று கெஞ்சினான் பாடல்:

“மடங்தையைத் தனிக்கண்டு அங்கி
மருவிய அரக்கே போல
உடைந்து நெக்குருகி ஆற்றா
உள்ளமோடு இளம்பூங் கொம்பே
கடந்திடற்கு அரிய காமக்
கடல் கடந்தேறக் கொங்கைக்
குடம்தரத் திருவுளத்தில் கோடி
என்று அரசு இறைஞ்ச” (10.44)

கொங்கைக்குக் குடத்தை ஒப்புமையாகக் கூறுவது இலக்கிய மரபு. இங்கே, கொங்கையாகிய குடம் எனக் கொங்கை குடமாக உருவகிக்கப்பட்டுள்ளது. கொங்கைக்கு யானைக் கொம்பு, தாமரை மொக்கு, மலை முதலியவற்றை உவமையாகக் கூறுவதும் உண்டு. இங்கே, கொங்கைக் கொம்பைக் கொடு - கொங்கை மொக்கைக் கொடு - கொங்கை மலையைக் கொடு என்றெல்லாம் கூறாமல், கொங்கைக் குடம் கொடு என்றது ஏன்? ஆற்றைக் கடப்பதற்குக் குடத்தைக் கவிழ்த்துப் பிடித்துக்கொண்டு நீந்திச் செல்லும் வழக்கம் உண்டு. இங்கே காமக் கடலாகிய பெரிய நீர்நிலையைக் கடக்க வேண்டுமாதலின் கொங்கை குடமாக உருவகிக்கப்பட்டது. ‘கும்பத்தின் அணைத்தவும் அணையா’ என்பது திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம். கும்பம்-குடம்.