பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தசாவதாரம்

13


தசாவதார ஆராய்ச்சிக்குத் துணையாய் அமைகின்றதன்றோ ?

உயிர் உலகில் தோன்றி எத்தனையோ கோடி ஆண்டுகள் கழித்தே உலகில் மனிதன் உருப்பெற்றான் என்பது விஞ்ஞானங்கொண்டு ஆராயும் இன்றைய ஆய்வாளர் தம் முடிபு. இம் முடிபினைத்தான் மெய்ஞ்ஞான நெறியில் வாழ்ந்த அறிஞர்கள் அன்றே கண்டார்கள். உயிர் வெற்று அசைவுப் பொருளாக, ஒன்றும் அறியா நிலையில் பல காலம் இருந்து, பின் ஒவ்வோர் உணர்வாகப் பெற்று வளர்ச்சியுற்ற தென்றும், ஐம்புலன்களால் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் அறிவுகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பெற்றதென்றும், இறுதியில் அவற்றிற்கெல்லாம் மேலான பகுத்தறிவும் உட்கொண்டு முற்றிய மனித நிலை உற்றதென்றும் அறிந்தோர் கூறுவர். இக் கூற்றைத்தான் மேலே கண்ட அடிகளில் மாணிக்கவாசகர் அன்றே சொல்லிவிட்டுச் சென்றார். தசாவதாரம் பற்றி இன்றை அறிஞர்கள் கொண்டுள்ள கருத்தும் அதுவேயாகும்.

திருமால் என்று தனிப்பட்ட வைணவர் வணங்கும் கடவுள் மட்டுமன்றிப் பிற சமயத்தவர் போற்றும் கடவுளரும் உயிரோடு கலந்து நின்ற உயர்ந்தவராகவே பேசப்படுகின்றனர். இறைவன் தொண்டருள்ளத்து அடங்கி நின்று அருள் புரியும் நெறியைப் பேசாத சமயம் உண்டோ? ‘நீவேறெனா திருக்க நான் வேறெனா திருக்க நேராக வாழும்’ வரம் வேண்டும் அடியார்கள் தாமே எச்சமயத்தும் உள்ளவர்கள்? எனவே, உயிர்த்தோற்ற வளர்ச்சியைக் குறிக்க, அவைகளை ஆக்கி அளித்து அழிக்கும் ஆண்டவனையே முதல் நிலையாகக் கொண்டு, ஆராய்ந்து கண்ட முடிபினை விளக்குவதில் தவறில்லை அன்றோ ? ஆம்: அந்த முடிபிலே தான் வளர்ச்சியின்