பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

மனிதன் எங்கே செல்கிறான்?


தோற்றத்தை இறைவனாகிய திருமாலின்மேல் ஏற்றிக் கூறினர் அறிந்தோர்.

உயிர் அசையும் பொருளாய் இருந்து, நெடுங்காலம் சென்று, அறிவுற்ற பொருளாய் மாறிய நிலை முதலில் நீரிலே தான் நிகழ்ந்ததென்பர் ஆய்வாளர். நீர் நிலத்துக்கு முன் தோன்றிய காரணத்தால் உயிர் நிலவாழ்வு பெறுமுன் நீர் வாழ்வு பெற்றிருக்க வேண்டுமென்பது அவர்தம் துணிபு.[1] ஆம்! அத் துணிவிலே தான் பத்து அவதாரங்களில் முதலிரண்டும் - நீர் வாழும் மீனும் ஆமை யும் - குறிக்கப் பெறுகின்றன. மீனினந்தான் முதலில் தோன்றியது; பின்பு பல மாறுதல்கள் பெற்றுப் படிப்படி வளர்ந்த வகையில் வந்தது ஆமை, துடிப்பும் துள்ளலும் அச்சமும் ஆட்டமும் உள்ள முதல் உயிரினம் மீனினம் என்பதைக் குறிக்கவே, முதலாவது மீன் அவதாரம் அமைந்துள்ளது. மீனினத்திலிருந்து நூறாயிரம் ஆண்டுகள் கழித்து, பல மாறுதலுக்குப் பின், நீர் வாழ்வோடு நிலத்திலும் ஊர்ந்து செல்லும் காலத்தே ஆமையும் பிற உயிரினங்களும் தோன்றின. அவற்றின் நிலை குறிக்கவே அடுத்து ஆமை அவதாரம் வந்தது.

நிலம் திண்மையுற்று நெடுங்காலம் சென்ற பின்பே உயிர் வளர்ச்சியுற்று வந்திருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியின் முடிவு. அவற்றுள் நிலம் அகழ்ந்து உணவு தேடும் - ஆமையின் உயிர் அறிவுக்கு மேற்பட்ட அறிவு கொண்ட - பன்றியின் தோற்றம் அமைந்திருக்க வேண்டும். ஆகவே, ஆமைக் கடுத்த வராகாவதாரம் அந்த உண்மையை விளக்க வருகின்றது.


  1. SIR ALISTER HARDY (64), Oxford Professor of Zoology, has proposed a new theory of the origin of Man--that he was once a see ape.
    -The 'Madras Mail' Dt. 7-3-1960