பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

மனிதன் எங்கே செல்கிறான் ?


அடுத்து வருகின்ற அவதாரங்கள் மனிதனைத் தோன்றிய இடத்திற்கே, படிப்படியாக அழைத்துச் செல்லும் நிலையை விளக்க வருவனவேயாம். இராமாவதாரத்துக்கு அடுத்துப் பேசப்படுவன கண்ணன், பலராம அவதாரங்களாகும். இரண்டும் மனிதன் தன் உயர்நிலையிலிருந்து சற்று வழுக்கி வீழ்ந்த நிலையையே காட்டுகின்றன. வஞ்சகமென்பதறியாது, தனித்து நின்ற இராவணனை ‘இன்று போய் நாளை வா,’ என்ற இராமனது மனித உள்ளத்துக்கும், மறையாத சூரியனை மறைத்து மாயம் செய்தும், வாங்க முடியாத கவச குண்டலங்களை வாங்கியும், கொல்ல முடியாதவனைத் துரும்பு மாறிப்போட்டுக் காட்டி வஞ்சித்துக் கொன்றும் நின்ற கண்ணனது மனித உள்ளத்துக்கும் இடையிலுள்ள மாறுபட்ட நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். இப்படிக் கூறுவதால், கண்ண பலராம அவதாரங்களைப் பழிப்பதாக நினைக்க வேண்டா. திருடனைப்பற்றிக் கூற வேண்டியவன் அவனைப் பற்றி நன்கு விளக்கித்தானே ஆக வேண்டும்? அது போன்றே உயிர்த் தோற்ற வளர்ச்சி பற்றிக் காட்ட வேண்டின் அது செல்லும் நிலையினையெல்லாம் காட்டித்தானே ஆகவேண்டும்? ஆகவே, சிந்தையால் தீமை தீண்டாத நல்ல உயர்ந்த மனிதனது உயிர் நிலை பின் வழுக்கி மிருக நிலைக்குச் செல்லும் வழியில் உள்ள முதல் படியைக் காட்ட வருவன இந்த அவதாரங்கள். ‘வஞ்சனைக்கோர் கொள்கலமாம் கொடிய பாவி’ என்று துரியோதனன் வாக்கிலும், ‘இமையோர்கள் வல்விரகில் யார் வல்லாரே!’ என்று கருமன் வாக்கிலும் வில்லிப்புத்துரார் கூறிய உண்மைகள் இது பற்றியவையல்லவோ? பகைவயிைனும் வந்து பணியின் உடன் பிறப்பாளனாக ஏற்கும் உயர்ந்த மனித உள்ளம்படைத்த இராமனுக்கும், உடன்பிறப்பாளன் அஞ்சி ஓடிய போதிலும் பிடித்திழுத்து அவனைக் கொல்வது நீதியென்று