பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

மனிதன் எங்கே செல்கிறான் ?


நன்மையும் அவரவரே தேடிக்கொள்வதால் உண்டாவனவே என்கின்றார். ஆம்! மனிதன் மனிதனாக வாழ்ந்தால் இந்த உண்மை நன்கு புலப்படும். தான் வாழும் விதத்தாலேயே ஒருவன் தனக்கு நன்மையையோ தீமையையோ தேடிக்கொள்ளுகிறான். மற்றவரை ஒத்து நோக்கும்.வாழ்வில் நன்மையன்றித் தீமை உண்டோ ? ‘தானே’ என்று தருக்கி வாழும் சுய வாழ்வில் தீமையன்றி நன்மையுண்டோ? இப்படித்தானே வரவழைத்துக் கொள்ளும் நன்மை தீமைகளுக்கு மனிதன் மற்றவர்களைக் காரணமாகக் காட்டி அவர்கள் மேல் மனத்தைத் திருப்பி மிருகமாகிறான். நன்மை தீமைகளை ஒத்தனவே நோதலும் தணிதலும் என்கின்றார் அப்புலவர். அவற்றிற்கெல்லாம் மேலாகச் சாக்காட்டைப் பற்றிப் பேசும் அவர்தம் பேச்சு உள்ளத்தைத் தொடுவதாகும். ‘சாதலும் புதுவ தன்றே ?’ என்ற சிறு தொடர் எவ்வளவு தூரம் மனிதனை ஈர்த்துச் செல்கின்றது துன்பத்திலெல்லாம். மிகக் கொடிய துன்பம் சாக்காடு. அச்சாக்காட்டைப்பற்றி எண்ணி எண்ணி வாடுபவரே யாவரும். எங்கோ சிலர் உழைத்து உடம்பின் பயன்கொண்டு, கூற்றம் வருங்கால் வருந்தாதிருப்பர். அந்தக் கொடுஞ் சாக்காட்டைத்தான் எவ்வளவு எளிமையாக்கிவிட்டார் அவர் உண்மையும் அப்படித்தானே 2 சாக்காடு நாள்தோறும் நடக்கின்ற நிகழ்ச்சி. இறப்பு, தோன்றிய நாள் தொட்டுத் தொடர்ந்த ஒன்று. அதைப் புதிதாக எண்ணி அதனால் வாடுவது எவ்வளவு பேதைமை ! வாடுவதை, விட்டுச் சாதல் உறுதி என்று உணர்ந்து அதற்கு முன் மனிதனாய்ப் பிறந்த பயனைச் செய்து வாழ்தலன்றோ பண்பாடு என்று சுட்டிக் காட்டுகின்றார் புலவர். மற்றும் இனிமைக்கு மகிழ்தலும் இன்மைக்கு முனிதலும் கலாசாரமே! பண்பாடோ ஆகாது என்பது அவர் கொள்கை, வள்ளுவனார் ‘இடுக்கண் வருங்கால் நகுக’, என்றார். ஆம்.