பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளம் திறக்குமா?

67


நிலையங்களுக்கெல்லாம்—கோயில்களுக்கெல்லாம்—இது வரையில் ஒதுக்கப்பட்டவர்கள் அறநிலையப் பாதுகாப்பாளர்களாக அமையட்டும், ஆயிரம் காணி வைத்து அல்லல் படுபவன், இல்லாதவனுக்குப் பங்கிட்டுக் கொடுக்க வழி செய்யட்டும். பண்டை முறைப்படி யாதொரு வேறுபாடும் இல்லாது அனைவரும் இறைவனைத் தொட்டு வழிபாடு செய்ய வகை காணட்டும். சாதியால் வேறுபாடு, சமயத்தால் வேறுபாடு என்ற மாறுபட்ட கொள்கைகள் மண்மூடிப் போகட்டும். பொருள்கள் அனைவருக்கும் பொது என்று முரசறையட்டும். ஒருவன் உழைக்க மற்றொருவன் குபேர வாழ்வு வாழ வழி இல்லை என்று சட்டம் செய்யட்டும். ‘உழைத்தால் உணவு; அன்றேல் அவதி,’ என்ற ஆக்க வழி கோலட்டும். கோயில்கள், குளங்கள், மடங்கள், பிற பொருள்கள் அனைத்தும் என்றும் யாவருக்கும் உரியன என்று முடிவு காணட்டும். ‘வாழ்ந்தால் அனைவரும் வாழ்தல்’ என்ற நல்ல குறிக்கோளை வாழ்விடை நடத்த வழி கோலட்டும். இவற்றையெல்லாம் செயலில் காட்ட முன்வரின், அன்று நாடு வாழும்; நாம் வாழ்வோம்; நலமெலாம் வாழும், அதற்கு அனைவர் உள்ளமும் – சிறப்பாக அரசியலில் உள்ளவர் உள்ளமும், செல்வர் உள்ளமும் திறக்கப்பட வேண்டும், இன்றேல், அவர்கள் செய்வதெல்லாம் வெளி மயக்கு என்பதை மக்கள் உணர நாளாகாது. உணரத் தொடங்கி விட்டார்கள். உணர்ச்சியின் பலன் வேறு வகையில் மீறுவதன் முன் உற்ற உள்ளங்கள் திறக்குமா? திறப்பின் அதுவே முன்னேற்றப் பாதை முகிழ்த்தற்குரிய வழி!