பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

மனிதன் எங்கே செல்கிறான்?


மகிழ்வார் என்று தானே நாமெல்லாரும் நினைக்கிறோம்? நினைப்பார்; நெஞ்சம் குலைந்து சாம்புவார்.

பாரதியார். இன்று இருப்பாரானால், ‘ஐயோ ! இதற்காகவா நாம் சுதந்தரம் வேண்டிப் பாடினோம்!’ என்று எண்ணி ஏக்கமுறுவார் என்பதில் ஐயமில்லை. பாரதியார் இந்தியாவின் அடிமை விலங்கை அறுக்கப் பாடினார்; மக்கள் வாழ்வை மலர்விக்கப் பாடினார்; மன்னனும் ஏழையும் ஒன்றென்பதை உணர்த்திப் பாடினார்; சாதி பேதமற்ற சமுதாயம் வேண்டிப் பாடினார்; அவற்றுடன் பிறந்த தமிழ் நாட்டை நினைந்து பாடினார்; தமிழர் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று பாடினார்; உலகில் தமிழ் மொழி போலத் தலை சிறந்த மொழி இல்லை என்று எக்களித்துப் பாடினார். ஆனால், பாடிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பாடிய அக்கலைஞரும் மாண்டு பல ஆண்டுகள் கழிந்துவிட்டன. அவர் இறந்து எத்தனையோ ஆண்டுகள் கழித்து அவர் விழைந்த விடுதலை கிடைத்தது. கிடைத்தும் என்? அவரைப்போன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் பாடியும் பாடுபட்டும் சிதைந்தும் சிறையிடை உழன்றும் பெற்ற சுதந்தர நன்னாட்டிலே தான் நாம் வாழ்கின்றோம். விரும்பிய சுதந்தர நாட்டில் இன்று பாரதியார் வந்தால் எவ்வளவு மகிழ்வார் என்று எண்ணத்தானே தோன்றுகிறது! ஆனால்...... அவர் வந்தால்...!

‘வந்தால் என்ன? வரட்டும். காட்டுவதற்கு வரண்ட தமிழ் நாடு இல்லையா? வாயாரப் பேசும் வெற்றுரைத் தமிழர்கள் இல்லையா? ‘தமிழ் மொழி என்ன—எழுத்துக்களே எக்கேடு கெட்டால்தான் என்ன?’ என்று கூறும் அறிஞாகள் தாம் இல்லையா என்று தமிழ் உள்ளம் படைத்தார் கேட்கலாம்.