பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

மனிதன் எங்கே செல்கிறான்?



தோன்றியவைதாமே? அந்த ஒன்றுமில்லா வெட்ட வெளியில் இத்துணைப் பேருலகங்களும் பிறவும் அடங்குகின்றன என்றால், அவ்வெட்ட வெளியை ஆராய்தல் அவசியமன்றோ? ஆம்! அந்தப் பெருவெளி ஆராய்ச்சிக்கு உணர்வு தேவை. உணர்ச்சி அற்ற மரக்கட்டையாய் வாழ்வோருக்கு வாழ்க்கை பலன் தாராது.

வான வீதியில் செல்லும் மீன் இனங்களைக் காணும் சாதாரணக் கண்களுக்கு அவை அன்றாட வாழ்வில் காணும் சாதாரணப் பொருள்களாய் அமைந்து ஒன்றுமில்லையாய்க் காண்கின்றன. ஆனால், ஆய்வுக்களத்தில் அமர்ந்து அல்லும் பகலும் தொலை நாடியின் வழியாக ஆய்ந்து முடிவு காணும் ஒருவனுக்கு அம்மீனினமும் அவற்றைச் சார்ந்த பிற உலகங்களும் பலப்பல புது உண்மைகளை உணர்த்திக்கொண்டேதான் இருக்கும். ஆராய்ச்சி உணர்வும் சலியா உளமும் பேருழைப்பும் உடைய ஒருவர், ஒவ்வொரு பொருளிலும் புதுமை கண்டு கொண்டே இருப்பர். அல்லாதோர், 'ஏதோ பேருக்கு வாழ்ந்தோம்!' என்று 'ஒன்றுமிலர் வாழ்வில்' முடிவர். ஆம்! அழியக்கூடிய இந்த உடம்பு அழிவதற்குள் பிறந்த பயனை ஆராய்ந்தறிந்து, இவ்வுடம்பால் உற்ற பயனைத் தமக்கும் மற்றவர்களுக்கும் தரும் வகையில் பாடு படுவர். நல்லவர். அப்படிப் பயன்படுபவர்-வருந்தி உடம்பின் பயன் கொண்டார்-கூற்றம் வருங்கால் வருந்துவதில்லை. வாழ்வும் சாவும் அவர்களுக்கு ஒன்றேதான். ஆகவே, கலக்கமோ ஏக்கமோ அவர்களை ஒன்றும் செய்யாது. பரந்த உலகத்தே சில நாட்களே வாழ்ந்து தாம் ஆற்ற வேண்டிய கடமை அறிந்து அத்துறையில் வாழ்வார் என்றும் வாழ்வார். அல்லாதார், என்றும் அல்லாதவராகவே முடிவர்.

இத்தகைய அரும்பெறல் உண்மைகளை நமக்கு நம் தமிழ் நாட்டுப் புலவர் பலர் கதைகள் வாயிலாகவும்