பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்றுமிலை

89



நீதிகள் வாயிலாகவும் அடிக்கடி விளக்கி உள்ளனர். அத்தகைய புலவருள் பரஞ்சோதியாரும் ஒருவர். அவர் பாடிய திருவிளையாடற்புராணத்தை அறியாதார் இருக்க மாட்டார்கள். அவருடைய கதைகளில் பல ஒரு வேளை காலத்துக்கு ஒவ்வாதனவாய் இருக்கலாம். ஆனால், கருத்துக்களோ, என்றென்றும் மேற்கொண்டு வாழ்விடை ஓம்பி வளர்க்க வேண்டுவனவாகும்.

திருவிளையாடற்புராணத்தில் பழியஞ்சின படலம் என்பது ஒரு பகுதி. ஒரு பார்ப்பனன் தன் மனைவியையும் பிறந்த இளங் குழந்தையையும் அழைத்துக் கொண்டு, திருப்பத்தூரிலிருந்து மதுரைக்கு வந்தான்; வரும் வழியில் அருகே உள்ள ஆலமரத்து நிழலில் மனைவியையும் மகவையும் இருக்க விட்டு மனைவியின் நீர் வேட்கையைத் தணிப்பதற்கு நீர் கொண்டுவரச் சென்றான். சிறிது நேரத்தில் நீர் கொண்டு வந்து பார்க்கையில் தன் மனைவி மார்பில் அம்பு பாய்ந்து இறந்து கிடந்தாள். குழந்தையோ அழுது கிடந்தது. அவன் தன் மனைவியைக் கொன்றார் யாராயிருக்கலாம் என்று தேடினான். படர்ந்த அந்த ஆலமரத்தின் மற்றொரு பக்கத்தில் ஒரு வேடுவன் இளைப்பாற உட்கார்ந்திருந்தான். அவனே தன் மனைவியைக் கொன்றவனாய் இருக்கக்கூடும் எனக் கருதி, அவனை அழைத்து அரச மன்றம் சென்று முறையிட்டான். பாண்டியனோ, அவன் கொன்றிருப்பான் என்ற கருத்தில் அவ்வேடனை வருத்தி உண்மையை உரைக்கக் கூறினான். வேடனோ, உண்மையில் தான் ஒன்றும் அறியாதவன் என்றும் குற்றமற்றவன் என்றும் மன்றாடினான். வேதியனோ, அண்மையில் வேறு யாரும் இல்லையாதலால், அவ் வேடனே கொன்றவன் என வழக்காடினான். பாண்டியன் ஒன்றும் தெளியானாகி, மறுநாள் ஆராய முடிவு செய்தான். பின், மன்னன் மதுரைச் சொக்கநாதரைப் பரவி, முடிவு காண முடியாத நிலையினைக் கூற, இறைவர்

6