பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 விந்தன்

ஜாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு, ‘உன்னுடைய குழந்தையா, இது?’ என்று கேட்டாள் கல்யாணி ஏதும் அறியாதவள் போல.

‘ஆமாம், அம்மா! இத்தனை நாட்களாக அவர் வீட்டில் இருந்ததால் அவரிடம் குழந்தையை விட்டு விட்டு நான் மட்டும் இங்கே வேலைக்கு வந்து விடுவேன்; இன்று அவர் எங்கேயோ வேலைக்குப் போகப் போகிறாராம். அதனாலே...’

‘ஒஹோ குழந்தையையும் இங்கே வேலைக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டாயாக்கும்?”

“ஆமாம், ஆமாம்!’

இந்தச் சமயத்தில் ராமமூர்த்தி அங்கே வந்து, “இதோ பார், விசாலம்! உன்னுடைய குழந்தையை வளர்ப்பதற்கு இது இடமில்லை, நீ மட்டும் இங்கே வேலைக்கு வர முடியுமானால் வா; இல்லாவிட்டால் நின்றுவிடு!’ என்றான் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக,

‘கோபித்துக் கொள்ளாதீர்கள் ஐயா! ஊருக்குப் போயிருக்கும் என் அம்மா நாளைக்கு வந்துவிடுவதாக எழுதியிருக்கிறார்கள்.அவர்கள் வந்ததும் நான் அவர்களிடம் இவனை விட்டு விட்டு வந்து விடுகிறேன்!”

ஆஹா எவ்வளவு அருமையாக நடிக்கிறார்கள்? நடிகர் திலகம் கூட இவர்களிடம் நடிப்புக்குப் பிச்சை வாங்க வேண்டும் போலிருக்கிறதே?

நாமும் இவர்களைப் போலவே கொஞ்ச நாட்கள் நடித்துத்தான் பார்ப்போமே?...

இவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டிருந்த போது, ‘என்ன கல்யாணி, என்ன யோசிக்கிறாய்?’ என்று கேட்டான் ராமமூர்த்தி.