பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 விந்தன்

‘அப்படிப் பார்த்தால் அந்த உள வலிமை என்னைக் காட்டிலும் அவளுக்கல்லவா அதிகமாயிருக்கும்? அவளல்லவா ஏற்கெனவே உங்களுக்காகத் தன் கணவனைத் தியாகம் செய்திருக்கிறாள்!”

“அது எப்படித் தியாகமாகும்?”

‘அது தியாகமாகாவிட்டால் நீங்கள் சொல்வது மட்டும் எப்படித் தியாகமாகும்?”

‘'நான் ஒருவருக்காக இன்னொருவரைக் கொல்ல விரும்பவில்லையே?”

“ஆம், உயிரில்லாமல் கொல்ல விரும்பவில்லை; உயிரோடு கொல்லவிரும்புகிறீர்கள்!”

‘'நான் சொல்வதைத் தவறாகப் புரிந்துகொள்கிறாய் கண்ணே, நான் சொல்வதைத் தவறாகப் புரிந்து கொள்கிறாய்! என் தம்பி என்னைவிட வயதில் இளையவன்; வசதி மிக்கவன்; கவர்ச்சியானவன்; கல்வியிலும் எனக்கு நிகரானவன் - இவற்றைவிட வேறு என்ன வேண்டும், ஒரு பெண்ணுக்கு?”

‘கற்பு!”

‘அதெல்லாம் வெறும் கட்டுக்கதை; செயற்கை வாழ்வில் மனிதன் கொண்ட சிறுநோக்கு! நீ வேண்டு மானால் பார்த்துக் கொண்டே இரு - இன்னும் கொஞ்ச நாட்களில் மாப்பிள்ளை தேடும் படலம், பெண் தேடும் படலம் எல்லாம் மறைந்து திருமணம் மணவினைபோன்ற சடங்குகளெல்லாம் ஒழிந்து, ஆணும் பெண்ணும் ஒருவரை யொருவர் விரும்பியவுடனே கூடிவாழும் இயற்கை வாழ்வை மேற்கொள்ளப் போகிறார்கள்; அந்த இயற்கை வாழ்விலே மனிதன் நோக்கும் பெரு நோக்காயிருக்கப் போகிறது!"