பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கப் புலவன்

20–5–1989 யாதும் அவாவிலன் யாமையென் றடங்கினோன் போதும் எனுமணம் பூத்த நெஞ்சினன் பயனில சொல்லாப் பாவலன் என்றும் நயனுள பொழியும் நாவலன் என்பால் ஈடிலா அன்பன் எளியன் இனியன் கேடிலா மனத்தன் கிளர்ச்சித் தலைவன் எங்கள் கழகப் புலவன் இவனெனப் பொங்கும் உணர்வாற் பொலிந்த பெற்றியன் பெருக்கிய புகழ்நிலை பேணிவந் துறினும் செருக்கே அறியாச் சீர்மை யாளன் அருமை அருமைஎன் றான்றோர் போற்றும் பெருமிதங் குன்றாப் பேரறி வாளன் தொல்காப் பியத்தைத் துருவித் துருவிப் பல்கால் ஒதிப் பாங்குற மொழிந்தவன் உள்ளந் தெளிவுற உலகம் மகிழ்வுற வள்ளுவந் தந்த மாமணி நாளும் சிந்தனைப் புதுமையைச் செவ்விதிற் காட்டும் செந்தமிழ் நடையிற் சிரியன் கூரியன் ஆள்வோ ராகினும் அவர்க்கும் அறிவுரை கேள்போல் நின்று கிளத்தும் துணிவன் ஆசாற் றொழுதெழும் அரும்பெறல் மாணவன் பேசான் பழிமொழி ஏசான் பிறரை நண்பன் பண்பன் நயத்தகு தமிழைக் கண்ணென் உயிரெனக் கருதும் இயல்பினன் கல்வியைத் தமிழிற் கற்கத் தடையெனில் அல்வினை யதுதான் அழிகவென் றெழுந்து வல்வில் லம்பெனச் சொல்லமர் தொடுத்தவன் அமர்க்களம் சென்றவன் ஆங்கே மாண்டனன் எமக்கெலாம் துயரே தந்தனன் ஐயஒ! யாவன் அவனென வினவின் தீவினை செய்யாச் செம்மல் செந்தமிழ்ப் பெம்மான் பொய்யா மாணிக்கப் புலவன் அவனே.

(முனைவர் வ.சுப. மாணிக்கனார் மறைவு குறித்துப் பாடியது)