பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

83



பல காரணங்களுக்கிடையில், உடல் உறவுக் காரணம் தலையாய இடம் வகிக்கின்றது. இனிய வாழ்க்கைக்கு அடிப்படை பொருளாதாரம் தான்.

பண வசதியில் தடுமாற்றம் ஏற்பட்டால், மன அமைதியில் விரிசல் ஏற்படும். இத்தகைய பணவசதியை படைத்துக்கொள்வதும், பராமரித்து பாதுகாத்துக் கொள்வதும் தம்பதிகள் கையில் தான் இருக்கிறது.

ஆணுக்கு ஆண்மை உண்டு. வலிமை உண்டு. செயல்படும் திறமை உண்டு. சீரான முடிவெடுக்கும் ஆற்றலும், முன்னேறிப் போகின்ற வேகமும், ஆராய்ந்தறியும் பண்பும், காரியத்தை நிறைவேற்றும் கடமை உணர்வும் நிறைய உண்டு.

பெண்ணுக்கோ, பெண்மையும், மென்மையும், நியாய உணர்வுத் தன்மையும், உணர்ச்சி வயப்படும் தன்மையுடன் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு நெகிழ்ந்து தரும் தன்மையும் நிறைய இயல்பாகவே உண்டு.

இத்தகைய ஆற்றல் படைத்தத் தம்பதிகள் இருவரும், இணைந்து செயல்பட்டால் இருவரின் வாழ்க்கையும் இனிதாகவே அமையும்.

இரண்டு உள்ளங்களும் மாறுபடுகிறபொழுது, அங்கே சுயநலம் சுழன்றுவீசும். அந்த சுழற்சியிலே அன்பும் பாசமும் கலைந்தோடி விடுகிறது. வெறும் ஏமாற்றுச்சிரிப்பும் வாய்ப்பேச்சும், பசப்புத்தன்மையும், வெறும் வாய்ப் பந்தலும் அன்றாட வாழ்வு நிகழ்ச்சிகளாய் அமைந்து விடுகின்றன. விருந்துக்கு போய் வயிற்று வலியுடன் வந்த கதை போல, மகிழ்ச்சிதேடப் போய், வேதனையை சுமந்து கொண்டு வந்த நிலையாய் மாறிப் போய்விடும்.