பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலுழ்ந்தன கண்

37

தான். “இனி என்ன செய்வது?” என்ற கேள்வி அவன் வாயிலிருந்து வந்தது. "நான் பாத்துக் கொள்கிறேன்.” என்று அபயம் அளிப்பவளைப் போலச் சொன்னாள் தோழி.

விளம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசிப்
பாசம் தின்ற தேய்கால் மத்தம்
கெய்தெனி இயக்கம் வெளில் முதல் முழங்கும்
வைகுபுலர் விடியல், மெய்கரந்து தன்கால்
அரிஅமை சிலம்பு கழீஇப் பன்மாண்
வரிப்புனை பந்தொடு வைஇய செல்வோள்,
‘இவைகாண் தோறும் நோவர் மாதோ!
அளியரோ அளியர்என் ஆயத் தோர்’என,
நும்மொடு வரவுதான் அயரவும்
தன்வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே.

★ விளாம்பழத்தின் வாசனை வீசும், நிறைந்த கருப் பத்தை உடையது போல நடுவிடம் பருத்த பானையில், கயிறு தின்ற தேய்ந்த தண்டையுடைய மத்தினால் மகளிர் வெண்ணெயைக் கடைந்து எடுக்கும் தொழில் தூண் அடியில் ஒலிக்கின்ற இரவு புலர்கின்ற விடியற் காலத்தில், தன் உடம்பை மறைத்துத் தன் காலில் இருந்த பரற்கல் அமைந்த சிலம்புகளைக் கழற்றி, பலவாகி மாட்சிமைப் பட்ட வரிந்து புனைந்த பந்தோடு அவற்றை வைக்கும் பொருட்டுச் சென்ற உம்முடைய காதலி, ‘இவற்றைப் பார்க்குந்தோறும் வருந்துவார்களே, என் தோழிமார்! மிகவும் இரங்கத்தக் கவர்கள்’ என்று எண்ணவே, அவள் உம்மோடு வருவதற்கு வேண்டியவற்றைச் செய்து கொண்டே இருக்கவும், அவள் சக்திக்கு உட்படாமல் அவள் கண்கள் அழுதன.

கரந்து, கழிஇ, வைஇய செல்வோள், என, அயரவும் கண் கலுழ்ந்தன என்று கூட்டுக.