உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

இன்றைய இசைப் போட்டி முடிகின்றது. மீண்டும் நாளைக்கு இசையரங்கம் தொடரும். மண்டபத்திலிருந்து மக்கள் வெளியேறித் தத்தம் இடத்துக்குச் செல்கிறார்கள். எல்லோரும் இன்று நடந்த இசையைப் பற்றியே பேசுகின்றனர்.

இன்று இரண்டாம் நாள். நேற்றைய கூட்டத்தைவிட இன்று கூட்டம் அதிகம். குறித்த நேரத்தில் எல்லோரும் வந்திருக்கிறார்கள். மன்னர் பெருமானும் வந்துவிட்டார். இசைப்போட்டி தொடங்குகிறது. இசை பயின்ற நம்பியர் ஒவ்வொருவராக வந்து பாடியும், வாசித்தும் செல்கின்றனர். ஒருவரும் வெற்றி பெறவில்லை. இன்னும் பல பேர் போட்டிக்குக் காத்திருக்கிறார்கள். அடுத்த நாளைக்கும் தள்ளி வைக்கப்படுகிறது.

மூன்றாம் நாள், நான்காம் நாள், ஐந்தாம் நாட்களிலும் தொடர்ந்து இசைப் போட்டி நடைபெறுகிறது. ஒருவராலும் மணமகளை வெல்ல முடியவில்லை. அடுத்த நாளைக்கும் போட்டி தள்ளி வைக்கப்படுகிறது.

இன்று ஆறாம் நாள். இன்றும் மக்கள் திரண்டு வந்திருக்கிறார்கள். காந்தருவதத்தையை எவரும் வெல்ல முடியாது என்று பேசிக்கொள் கின்றனர். இசைப் போட்டி தொடங்குகிறது. போட்டியிட வந்தவர் தோற்றுப் போகிறார்கள். காந்தருவதத்தை வெற்றியடைகிறாள். ஒருவராலும் அவளை வெல்ல முடிய வில்லை.

திருமலர்க் கமலத் தங்கண் தேனினம் முரல்வ தொப்ப விரிமலர்க் கோதை பாட எழால்வகை வீரர் தோற்றார். எரிமலர்ப் பவழச் செவ்வாய் இன்னரம் புளர மைந்தர் புரிநரம் பிசைகொள் பாடல் உடைந்தனர், பொன்ன னாட்கே

பொழுது கழிந்துவிட்டது. அரசர் பெருமான் ஆசனத் திலிருந்து எழுந்து சபையோரை நோக்கிப் பேசுகிறார். “ஆறு நாட்களாக இசைப் போட்டியும் வீணைப் போட்டியும் நடந்தன. நூற்றுக்காணக்கானவர் வந்து போட்டியிட்டார்கள். ஒருவரேனும் வென்றார் இல்லை. மணமகளே எல்லோரையும் வென்றாள். காந்தருவதத்தையை இசையில் வெல்வோர் இவ்வுலகத்திலே ஒருவரும் இல்லை. ஆகையால், இவ் விசைப் போட்டியை இன்றோடு நிறுத்திக் கொள்வோம் என்று கூறி முடிக்கிறார். எல்லோரும் அரசன் சொன்னதற்கு உடன் படுகின்றனர். கிறீதத்தப் பிரபுவின் முகம் வாட்டமடைகிறது. பாவம்! இந்த இசைத் திருமணத்தில் தன்னுடைய மகளுக்கு மணமகன் கிடைக்கவில்லையே என்கிற கவலை அவருக்கு.