உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10

அவந்தி நாட்டரசனான பிரச்சோதனன் இவ்வாறு சூது செய்து உதயணனைக் காட்டில் வஞ்சகமாகச் சிறை செய்து கொண்டு போனான். உதயணனுடன் நேரில் போர் செய்து வெற்றி பெற முடியாது என்று அறிந்து பிரச்சோதன அரசன் இவ்வாறு சூதாகச் சிறைப் பிடித்துக்கொண்டு போனான். சிறைப்பட்ட உதயணன் அவந்தி நாட்டின் தலைநகரமான உச்சயினி நகரத்தில் சிறைச் சாலையில்

வைக்கப்பட்டான்.

உதயண அரசன் உச்சயினி நகரத்தின் சிறைச்சாலையில் இருந்தபோது, சில நாட்களுக்குப் பிறகு எதிர்பாராத நிகழ்ச்சி யொன்று ஏற்பட்டது. பிரச்சோதன அரசனுடைய பட்டத்து யானைக்கு வெறி பிடித்துக் கட்டுக்களை யறுத்துக் கொண்டு யானைப் பந்தியிலிருந்து வெளிப்பட்டு நகரத்தில் புகுந்து தெருக்களில் எதிர்ப்பட்டவர்களை யெல்லாம் கொன்று நகர வீதிகளில் திரிந்தது. யானைப் பாகர்கள் வந்து அதை அடக்க முயன்றபோது அவர்களையும் அது கொன்றுவிட்டது. நகர மக்கள் வீதிகளில் நடமாட அஞ்சினார்கள்.

இந்தச் செய்தியை அரசன் அறிந்து இன்னசெய்வதென்று அறியாமல் திகைத்தான். அப்போது அமைச்சன் அரசனுக்கு யோசனை கூறினான். “நம்மிடம் சிறையில் இருக்கிற உதயணஅரசன் யானைகளை அடக்குவதில் பேர் பெற்றவன். அவனைச் சிறையிலிருந்து விடுவித்து அவனைக் கொண்டு யானையை அடக்க வேண்டும். அவனை யல்லாமல் வேறு ஒருவரும் இந்த மத யானையை அடக்க முடியாது.? அமைச்சர்கள் கூறிய யோசனையை அரசன் ஏற்றுக் கொண்டு, சிறைச்சாலையிலிருந்து உதயணனை விடுத்துத் தன்னிடம் அழைத்து வரும்படி கட்டளையிட்டான்.

உதயணன் சிறைச்சாலையிலிருந்து அரண்மனைக்கு வந்த போது பிரச்சோதன அரசன் அவனை வரவேற்று ஆசனத்தில் அமரச் செய்து அவனிடம் இவ்வாறு கூறினான்: “நான் உம்மைச் சூழ்ச்சியினால் சூதாகச் சிறைப்பிடித்து வந்தது தவறு. அந்தத் தவற்றை நான் உணர்ந்து வருத்தம் அடைகிறேன். நான் செய்த குற்றத்தைப் பொறுத்து அருள வேண்டும். தாங்கள் யானைகளை அடக்குவதில் தேர்ந்தவர் என்று அறிகிறேன். இப்போது நம்முடைய பட்டத்து யானை வெறிகொண்டு நகரத்தில் திரிகிறது. அதனை அடக்கியருள வேண்டும்." இவ்வாறு பிரச்சோதன அரசன் கேட்டுக்கொண்டதற்கு உதயணன் இணங்கினான்.