உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

35

கோயில்களிலும் சித்திரங்களை எழுதி வைத்தார்கள். கட்டிடக் கலை சிற்பக்கலைகளைவிட சித்திரக்கலை மிக நுட்பமானது; தகுந்த பாதுகாப்பு இல்லாவிட்டால் எளிதில் அழிந்துவிடக் கூடியது.

நகரங்களைத் தவிர மற்ற ஊர்களில் வாழ்ந்த குடிமக்கள் அக்காலத்தில் ஓலை வீடுகளில் வசித்தார்கள். ஏன்? இக்காலத்தில் கூட பெரும்பாலும் ஓலை வீடுகளில்தான் வாழ்கிறார்கள். ஆகவே ஓலை வீடுகளில் சுவர் வியங்களை எழுதி வைக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. ஓவியங்கள் அக்காலத்தில் அரண்மனைகளிலும் மாளிகைகளிலுமே இடம் பெற்றன. அரண்மனைகளும் மாளிகை களும் அழிந்துவிட்ட போது, சித்திரக் கலைகளும் மறைந்து விட்டன. சேர சோழ பாண்டியர்களின் அரண்மனைகளும் சித்திர மாடங்களும் எங்கே? வள்ளல்கள் சிற்றரசர்களின் மாளிகைகள் எங்கே? அவை யெல்லாம் அழிந்துவிட்டன. அவற்றோடு நுட்ப நுண்கலையாகிய சுவர் ஓவியங்களும் மறைந்து விட்டன.

பல்லவர் காலத்து ஓவியம்

மகேந்திரவர்மனும் அவனுக்குப் பின்வந்த பல்லவ அரசர்களும் அமைத்த குகைக் கோயில் குகைக் கோயில் சுவர்களில் சுவர்களில் வர்ண ஓவியங்கள் எழுதப்பட்டிருந்தன. அவையும் காலப்பழமையினாலும் அழிவு வேலைகளினாலும் மறைந்துவிட்டன். மகேந்திரவர்மனுக்கு சித்திரக்காரப் புலி என்னும் சிறப்பு பெயரும் உண்டு. அன்றியும் தக்ஷிண சித்திரம் என்னும் தென் இந்திய ஓவிய நூலுக்கு உரை எழுதினான் என்றும் கூறுகிறார்கள். இவன் அமைத்த குகைக் கோயில்கள் சிலவற்றிலே சித்திரங்கள் எழுதப்பட்டிருந்த அடையாளங்களும் பச்சை மஞ்சள் சிவப்பு முதலிய வர்ணங்களும் அங்கங்கே காணப்படுகின்றன. இதனால் அக்குகைக் கோயில்களில் சித்திரங்கள் எழுதப்பட்டிருந்தன என்பது தெரிகிறது.

நற்காலமாக எப்படியோ சித்தன்னவாசல் குகைக் கோயில் ஓவியம், மாட்டுக்காரப் பையன்களின் அட்டூழியங்களுக்கும் மற்றவர்களின் நாச வேலைக்கும் தப்பித் தவறி அரைகுறை யாகவேனும் இப்போதும் இருக்கிறது. நமது தமிழ்நாட்டிலே உள்ள மிகப் பழையகாலத்துச் சித்திரம் இதுவே. இவை, கி. பி. 600 முதல் 630 வரையில் அரசாண்ட மகேந்திரவர்மன் காலத்தில் எழுதப் பட்டவை.