உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

97

இந்தக் குகையின் பாறைச்சுவரில், கொற்றவையின் உருவம் புடைப்புச்சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. பாறையில் 5x 5' சதுர அமைப்புள்ள சிற்பமாக இது காணப்படுகிறது. கொற்றவை, மகிடாசுரனாகிய எருமையின் தலைமேல் வலதுகாலை வைத்து, இடதுகாலைத் தரைமேல் வைத்து நிற்கிறாள். தலையில் மகுடமும் காதுகளில் பெரிய பொற்றோடுகளும் அணிந்துள்ள கொற்றவையின் கண்களில் அச்சந்தரும் வீரஒளி மிளிர்கிறது. வலது கையில் சக்கரமும் இடதுகையில் சங்கமும் ஏந்தி, மற்ற இரண்டு கைகளையும் இடுப்பின் மேலும் தொடையின்மேலும் வைத்துக்கொண்டு, சற்றுச் சாய்ந்து நிற்கும் கொற்றவையின் அமைப்பு இனிய காட்சியாக இருக்கிறது. கழுத்தில் பொன்னரிமாலைகளும் கைகளில் சுடகங்களும் வளைகளும் இடுப்பில் மேகலையும் கால்களில் சிலம்பு சதங்கைகளும் அணிந்து தெய்வத் திருவுருவத்துடன் காட்சியளிக் கிறாள் இக்கொற்றவை.

ம்

மகிடாசுரமர்த்தனியாகிய கொற்றவையின் உருவங்கள் பல பல்லவர் காலத்துச் சிற்பங்களில் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் எருமைத் (மகிடாசுரன்) தலைமேல் நிற்பதுபோல அமைந்துள்ளன. ஆனால், இந்தக் கொற்றவையின் சிற்பமோ, அவ்வாறில்லாமல் ஒருகாலை எருமைத் தலைமேலும் மற்றொரு காலைத் தரையின்மேலும் வைத்து நிற்கிறது. இந்த அமைப்புள்ள கொற்றவையின் உருவம் வேறெங்கும் காணப்படவில்லை. இதுவும் பல்லவச் சிற்பங்களில் மிகப் பழமையானது.3

கொற்றவையின் வலப்புறத்தில் ஒர் ஆள் மண்டியிட்டு முழங்காலின்மேல் உட்கார்ந்திருக்கிறான். காதில் தோடு அணிந்து நீண்ட தலைமுடியைச் சடைபோலக் கட்டியிருக்கிறான். மீசை அழகாக வளர்ந்திருக்கிறது. இடது கையினால் இடது கால் தொடையின் சதையைப் பிடித்துக் கொண்டு வலது கையில் கட்டாரி பிடித்துச் சதையை அறுக்கிறான். இவனுடைய அடர்ந்த தலைமயிரும் மீசையும் இவன் போர்வீரன் என்பதைத் தெரிவிக்கின்றன.

இந்தப் போர்வீரனுக்கு எதிரிலே கொற்றவையின் இடப்புறத்தில் மற்றும் ஒர் ஆள், தரையில் முழங்கால் மண்டியிட்டு அமர்ந்திருக் கிறான். இந்த ஆள் தலையில் நீண்ட மயிர் இல்லை; முகத்தில் மீசையும் இல்லை. மார்பில் யோகப்பட்டை அணிந்திருக்கிறான். நீண்டு தொங்கும் காதுகளில் அணிந்துள்ள சிறிய குண்டலங்கள் தோளின் மேல் தங்கியுள்ளன. வலது கையைச் சின் முத்திரையாகப் பிடித்து