உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

165

மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்துச் சாசனங்களும், மூன்றாம் இராசராசன் காலத்துச் சாசனங்களும், இங்குக் காணப்படுகின்றன. மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்துச் சாசனங்களாவன. :-

இவனுடைய ஆறாம் ஆட்சியாண்டில் எழுதப்பட்டவை இரண்டு சாசனங்கள். திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ வீரராஜேந்திர சோழ தேவருடைய (மூன்றாங்குலோத்துங்க சோழனுடைய) ஆறாவது ஆண்டில் (கி.பி. 1184-இல்) எழுதப்பட்டவை. பையூர் நாடாழ்வான் குவளையம் அழகியான் ஒற்றிஅரசன், இக்கோவிலுக்குத் திருநந்தாவிளக்குக்காகத் தொண்ணூற்றாறு ஆடுகளைத் தானங் கொடுத்ததைக் கூறுகிறது- அதாவது இந்த ஆடுகளின் பாலிலிருந்து நெய் எடுத்து நாள் தோறும் ஒரு திருவிளக்கு ஏற்றுவதற்காக இந்த ஆடுகள் தானம் செய்யப் பட்டன) (No. 701. S. I. I. Vol. XVII). இதே ஆள் இந்தக் கோவிலுக்கு தொண்ணூற்றாறு ஆடுகளைத் தானஞ்செய்ததை இன்னொரு கல்வெட்டு கூறுகிறது. இந்த சாசனத்தின் விசித்திரம் என்னவென்றால், "திருஞாயிற்றுக் கிழமைதோறும் ஒரு ஆடு வெட்டக் கடவதாக விட்ட ஆடு தொண்ணூற்றாறு” என்று இந்த சாசனத்தில் எழுதப் பட்டு இருப்பதுதான். (No. 708. S. I. I. Vol. XVII). இது மிகவும் புதுமையாகக் காணப்படுகிறது. சிவன் கோவில்களில் ஆடுகளை வெட்டும். வழக்கம் இல்லை. இதுவரையில் இந்த வழக்கம் இருந்ததில்லை. ஆனால் இந்த ஒரே சாசனம் ஆடுவெட்டுவதைக் கூறுகிறது! காளிக் கோயிலுக்கு மரபுதான். ஆனால் சிவன் கோவிலில் வெட்டுவது மரபு அன்று. வழக்கமும் அன்று. நிச்சயமாகக் கிடையாது. இந்தக் கல்வெட்டெழுத்து கூறுவது கூறுவது கருத்து என்ன என்று தெரியவில்லை.

இந்த அரசனுடைய 11-ஆம் ஆண்டில் (கி.பி. 1188 - 89 -இல்) எழுதப்பட்ட சாசனம், கோசலைத்தரையன் வலந்தருவான் கோசலத் தரையன், இக்கோயிலில் திருவிளக்கு எரிப்பதற்காக முப்பத்திரண்டு பசுக்களைத்தானஞ் செயத்ததைக் கூறுகிறது. இந்தப் பசுக்களின் பாலிலிருந்து கிடைக்கிற நெய்யினால் திருவிளக்கு எரிக்கவேண்டும் என்று இந்த சாசனங் கூறுகிறது. நெய் அளிக்கும் உழக்குக்கு ‘திருக்காரிக் கரையுடையான்' உழக்கு என்றுக் கூறப்பட்டுள்ளது. (No.

686. S. I. I. Vol. XVII)

இவ்வரசனுடைய 15 – ஆம் ஆண்டில் எழுதப்பட்ட சாசனம் (கி.பி. 1192 -93.) இதன் பிற்பகுதி எழுதப்படாமல் விட்டுவிடப் பட்டுள்ளது. இத்திருக்கோவிலில் விளக்கு எரிப்பதற்காக 49 பழங்காசு கொடுக்கப்பட்டதை கூறுகிறது. (No. 688. S. I. I. Vol. XVII)