உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

243

சாசனம் கூறுகிறது. பப்ப பட்டாரகன் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற யஜ்ஞபட்டன், திருகாட்டுப்பள்ளிக் கோயிலைக் கட்டினான். விஜயநந்தி வர்மனுடைய ஆறாவது ஆண்டிலே, சோழ மகாராசன் குமாராங்குசன் விண்ணப்பத்தினால், அக்ரதந்த குடும்பத்தைச் சேர்ந்த இறையூர் உடையான் நம்பி என்னும் அமைச்சன் ஆணத்திப்படி, கச்சிப்பேட்டுப் பேராயன் என்னும் தச்சன் இச் செப்பேடுகளை எழுதினான்.

இச்சாசனம் வடமொழியிலும் தமிழிலும் எழுதப்பட்டிருக்கிறது. வடமொழியில் அரசனுடைய மெய்க் கீர்த்தியை எழுதியவர் மாகேசுவரன் மனோதீரன் என்பவர்.

இந்தக் கோயில் இருக்கிற திருக்காட்டுப்பள்ளி என்னும் கிராமம், செங்கற்பட்டு மாவட்டத்துப் பொன்னேரி தாலுகாவில் இருக்கிறது. புழற்கோட்டத்து நாயறுநாட்டுக் காட்டுப்பள்ளி என்று சாசனத்தில் கூறப்படுகிறது.

வடமொழி சாசனம்

இந்த சாசனத்தில் உள்ள வடமொழிச் சுலோகங்களின் தமிழாக்கம் வருமாறு :

66

"ஸ்வஸ்தி ஸ்ரீ நமஸ்ஸிவாய. எங்கும் நிறைந்ததும், அறிஞரால் என்றும் உள்ளது எங்கும் இருப்பது குற்றமற்றது என்று புகழப்படுவதும், ஆழ்ந்த பக்தியினாலே அடையப்பெறுவதும், வாக்கு மனங்களுக்கு எட்டாததும், நன்மையாகிய மங்கலத்தைத் தருவதும், அழிவற்றதும், பெரியவர்களான முனிவர்கள் புலன்களின் வேகத்தை அடக்கித் தவம் இருந்து அடைய முயற்சி செய்யப்படுவதும் ஆகிய ஒளிமயமான பரம்பொருள் நிலைபெற்ற இன்பத்தை அளிக்கக்கடவது.

சர்வாணி (பார்வதி)யின் மார்பில் திகழும் சந்தனக் குழம்புபட்டு அழகாக விளங்குகிற ஸ்ரீகண்டனுடைய திருக்கைகள், தேவர்களின் பகைவர்களுடைய மனைவிமார் அணிந்த நகைகளைக் களைந்தவை. (தேவரின் பகைவரைக் கொன்றவை.) வடவைத் தீயின் ஒளிபோல விளங்கும் ஆயுதங்களை ஏந்தியவை ; தலையில் மாணிக்கம் உள்ள நாகங்களைக் கடகங்களாகப் பூண்டவை. அத்தகைய திருக்கைகள் எப்போதும் உலகத்தைக் காக்கக்கடவது.