உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

பூக்கட் கழித்தலைக் கெண்டைமுள்

ளோடுண்ட புள்ளினமே.

இச்செய்யுளில் கூறப்பட்ட தயாபரன் என்னும் பெயர் பாட்டுடைத் தலைவனின் பெயர்தானா என்பது தெரியவில்லை. அவன் ஆண்ட தஞ்சை, சோழநாட்டுத் தஞ்சையா, அல்லது பாண்டி நாட்டிலிருந்த தஞ்சாக்கூர் என்னும் தஞ்சையா என்பதும் தெரியவில்லை.

அரையர் கோவை என்னும் இந்நூலைப் பற்றியும். இதன் ஆசிரியரைப் பற்றியும். இதன் பாட்டுடைத் தலைவரைப் பற்றியும் யாதொரு செய்தியும் தெரியவில்லை.

5. அறம் வளர்த்த முதலியார் கலம்பகம்

இப்பெயருள்ள ஒரு நூல் இருந்தது என்பதைத் தமிழ் நாவலர் சரிதையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

'அறம் வளர்த்த முதலியாரைப் பாண்டியன் கலம்பகம் பாடலாமோ?' என்று கேட்ட ஒரு புலவர்க்குப் பாண்டியன் கீழ்க்கண்ட செய்யுளைப் பாடி விடையிறுத்தான் என்று தமிழ் நாவலர் சரிதை கூறுகிறது:

“உங்கண் மனந்தெரியும் புலவீர், ஒருசீர் மரபோம் திங்கண் மரபினம் திங்களின் கூடச்செம் பூரறமா துங்கன் மரபிற் கங்கையுஞ் சூடினன் சோதியன்றோ? எங்கண் மரபுண் டெனக்கவி பாடினம் யாமவற்கே.

இச்செய்யுளில் செம்பூரறமாதுங்கன் என்பது செம்பூர் அறம் வளர்த்த முதலியாரைக் குறிக்கிறது. செம்பூர் அறம் வளர்த்த முதலியார் விஜய நகர அரசரின் அமைச்சராக ஹம்பி நகரத்தில் இருந்தவர். இவரை அம்பி (ஹம்பி) அறம் வளர்த்த முதலியார் என்றும் கூறுவர்.

இவர்மீது பிற்காலத்துப் பாண்டியர் ஒருவர் கலம்பகம் பாடினார். அதையறிந்த ஒரு புலவர், ‘அரசராகிய நீர் மற்றவரைப் பாடலாமோ?' என்று வினவினார். அதற்கு விடையாக இந்தப் பாட்டைப் பாண்டியனார் பாடினார். இச்செய்யுளின் கருத்து இது: சிவபெருமான் திங்களையும் கங்கையையும் தமது திருச்சடையில் சூடினார். ஆகவே, திங்கள் மரபினராகிய பாண்டியருக்கும் கங்கைக் குலத்தவராகிய அறம் வளர்த்த முதலியாருக்கும் தொடர்பு உண்டு. இத்தொடர்பு பற்றித்தான் அவர்மீது கலம்பகம் பாடினேன் என்பது.