உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரைI

இந்நூலாசிரியர் ஆண்டில் இளையராயினும் ஆராய்ச்சித் துறையில் முதிர்ந்தவர். தென்னிந்தியாவிலும் ஈழ நாட்டிலும் அண்மையில் வாழ்ந்த தமிழறிஞர் பலருடைய வாழ்க்கை வரலாறு, அன்னா ரியற்றிய நூல் வரலாறு என்னும் இவைதம்மைத் தெளிவுபெற ஆராய்ந்தறியவேண்டுமென்னும் பெருவிருப்ப முடையவர். பல ஆண்டுகளாக நான் இவரை நன்கறிவேன்; நல்லொழுக்கம் வாய்ந்தவர்; நல்லோருடைய கூட்டுறவைப் பொன்னேபோற் போற்றுபவர்.

இந்நூலினகத்தே இவர் தொகுத்துவைத்திருக்கின்ற முடிபுகள் வராற் பல ஆண்டுகளாக ஆராய்ந்து காணப்பட்டன. பலப்பல ஆங்கில நூல்களிலும், தமிழ்நூல்களிலும், பரந்துகிடந்த உண்மைகளை ஒருங்கு திரட்டிச் செவ்வி பெற வகுத்து, நூலுருவமாக்கி வெளியிட் டிருக்கின்றார். இந்நூல் கல்லூரிமாணவர்க்கும், தமிழறிஞர்க்கும், தென்னிந்திய சரித்திர ஆராய்ச்சியாளர்க்கும் இன்றியமையாத தொன்றாகும். ஆதலின், இதனைத் தமிழுலகம் உவந்தேற்று ஆதரிக்கு மென்பதற் கையமில்லை. இந் நூலாசிரியர் இன்னும் பல ஆராய்ச்சிகள் செய்து, தமிழகத்திற்குப் பயன்பட வாழுமாறு எல்லாம் வல்ல இறைவன் இன்னருள் புரிவானாக.

சிவானந்த வித்தியாலயம், கல்லடியுப்போடை, காத்தான்குடி, சிலோன்.

சுவாமி விபுலானந்தர்.

19-11-36.