உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொ

களிப்பு

களிப்பு என்னும் சொல்லுக்கு மகிழ்ச்சி, சந்தோஷம் என்னும் பொருள் உண்டு. இந்தச் சொல்லுக்கு இந்த அர்த்தம் பிற்காலத்தில் ஏற்பட்டதாகும். மகிழ்ச்சி, சந்தோஷம் என்னும் உயர்ந்த பொருளில் இப்போது வழங்குகிற களிப்பு என்னும் சொல், முற்காலத்தில் இழிந்த ருளில் வழங்கப்பட்டது. கள் அருந்திக் களித்தல், மது உண்டு மயங்குதல் என்னும் பொருளில் களிப்பு என்னும் சொல் முற்காலத்தில் வழங்கப்பட்டது. களிப்பு என்னும் சொல் கள் என்னும் சொல்லிலிருந்து உண்டானது தான். கள் என்னும் சொல்லிலிருந்து தோன்றிய களிப்பு என்னும் சொல்லுக்கு எப்படி உயர்ந்த பொருள் இருக்க முடியும்? களித்தான் என்றால் கள் அருந்தி மயங்கினான் என்பது அந்தக் காலத்து அர்த்தம்; இக்காலத்தில், களித்தான் என்றால் (கள்ளுண்ணாமலே) மகிழ்ந்திருந்தான் என்பது பொருள். முற்காலத்தில் இழிந்த பொருள் பயந்த களிப்பு என்னும் சொல் இக்காலத்தில் உயர்ந்த பொருளில் வழங்கப்படுகிறது.

ஆனால், உயர்ந்த பொருளில் இந்தச் சொல் பழைய இலக்கியங்களில் வழங்கப்படவில்லை. களிப்பு என்றால், கள்ளையும் மதுவையும் அருந்தி மயங்கியிருத்தல் என்பதுதான் பழைய இலக்கியங்களில் பயின்று வரும் பொருள். இதைப் பழைய நூல்களில் காண்போம்.

திருக்குறளில், கள்ளுண்ணாமை என்னும் அதிகாரத்தில் இந்தச் சொல் வழங்கப்படுகிறது.

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி.

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்

தொளித்ததூஉம் ஆங்கே மிகும்.

களித்தானைக் காரணங் காட்டுதல், கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ யற்று.

கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்

உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.