உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

"மேல் சித்தாமூர், தென் ஆர்க்காடு ஜில்லாவில் முக்கியமான ஜைன ஊர். அங்கே ஜைனரின் முக்கியமான கோயில் ஒன்று இருப்பதோடு, ஜைனரின் குருவும் அவ்வூரில் இருக்கிறார். இந்தக் கோயிலின் வடக்கேயுள்ள முற்றத்தில், வெகுகாலத்துக்கு முன்னே மதராசுக்கு அருகில் உள்ள மயிலாப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டது. என்று கூறப்படுகிற ஒரு பெரிய ஜைன விக்கிரகம் இருக்கிறது.’

கடல் கொஞ்சங் கொஞ்சமாக உள்ளே வருவதால் கடற்கரையில் இருந்த நேமிநாதர் கோயில் அழிந்துவிடும் என்று அக்காலத்தவர் நினைத்தது தவறாக முடிந்தது. ஏனென்றால், அவர்கள் நினைத்தது போலக் கடல் உள்ளே வாராமல் காலப்போக்கில் மீண்டும் பின்னுக்குப் போய் விட்டது. அதனால், நேமிநாதர் கோயில் கடலால் அழிய வில்லை. அதற்குமாறாக போர்ச்சுகீசியரால் மதப் பகைமை காரணமாக இக்கோயில் அழிக்கப்பட்டது. போர்ச்சுகீசியர் மயிலாப்பூர் கடற்கறை யோரமாகக் கோட்டை கட்டிக் கொண்டு வியாபாரம் செய்து வந்தார்கள். நேமிநாதர் கோயில் மட்டுமல்ல, நேமிநாதர் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த கபாலீசுவரர் கோயில் என்னும் சைவக் கோயிலும் அழிக்கப் பட்டது. இப்போதுள்ள கபாலீசுவரர் கோவில், பழைய கோயிலன்று; புதிதாகக் கட்டப்பட்ட கோயிலாகும்.

நேமிநாதர் கோயிலுக்கும், பழைய கபாலீசுவரர் கோயிலுக்கும் சொந்தமாக இருந்த நிலங்கள் யாவும் இப்போது கிருஸ்துவக் கோயிலுக்குச் சொந்தமாய் விட்டன. போர்ச்சுகீசியர் மயிலாப்பூரில் இருந்தபோது இது நடைபெற்றிருக்க வேண்டும்.

மயிலாப்பூரில், நேமிநாத சுவாமி ஆலயம் என்னும் ஜைனக்கோயில் இருந்தது என்பதற்கு இலக்கியச் சான்றுகளும், எபிகிராபி (சாசனச்) சான்றுகளும், ஆர்க்கியாலஜி சான்றுகளும் உள்ளன. அவற்றை ஆராய்வோம்.

முதலில் இலக்கியச் சான்றுகளைப் பார்ப்போம்.

தமிழில் திருநூற்றந்தாதி என்னும் ஒரு தோத்திர நூல் உண்டு. இது ஜைன நூல், மயிலாப்பூரில் கோயில் கொண்டிருந்த நேமிநாத சுவாமியின் பேரில் அவிரோதி யாழ்வார் என்னும் ஜைனரால் பாடப்பட்டது.