60
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4
5. பிறநாட்டு வாணிகர்
பழங்காலத்துத் தமிழர் தரை வழியாகவும், கடல் வழியாக வும் பாரதநாடு முழுவதும் சென்று வாணிகம் செய்தார்கள். உஞ்சை (உச்சயினி), கலிங்கப்பட்டினம், காசி (வாரணாசி), பாடலி (பாடலிபுரம் முதலான இடங்களிலும் கடல் கடந்த நாடுகளாகிய காழகம் (பர்மா தேசம்) அருமணவன் (Ramanna), தக்கோலம் (Takkola), கிடராம் (கடாரம்), சாவகம் (கிழக்கிந்தியத் தீவுகள்) முதலான இடங்களுக்கும் சென்று வாணிகஞ் செய்ததை முன்னமே கூறினோம்.
தமிழ் வாணிகர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இலங்கைக்குச் சென்று அங்கே அநுராதபுரத்தில் தங்கி வாணிபம் செய்திருந்தனர் என்பது, சமீப காலத்தில் அந்நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துக் கல்வெட்டினால் அறியப்படுகிறது என்பதையும் கூறினோம்.
தமிழக வாணிகர் அயல்நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்ததுபோலவே அயல்நாட்டு வாணிகரும் தமிழகத்துக்கு வந்து வாணிகஞ் செய்தார்கள். அக்காலத்தில் வாணிகத்தில் உலகப் புகழ் பெற்ற காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்திலே அயல்நாடுகளி லிருந்து கப்பலோட்டி வந்த வேறு பாஷைகளைப் பேசின மக்கள் தங்கியிருந்ததைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
‘பயனற வறியா யவனர் இருக்கையும் கலந்தரு திருவிற் புலம் பெயர் மாக்கள் கலந்தினி துறையும் இலங்குநீர் வரையும்’
‘மொழி பெயர் தேத்தோர் ஒழியா விளக்கம்'
‘மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் முட்டாச் சிறப்பிற் பட்டினம்'
(சிலம்பு, 5:10-12)
(சிலம்பு, 6:43)
(பட்டினப்பாலை, 216-218)