உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

141

நான்கு எழுத்துக்களை நேர்த்தி என்று படித்து, நேர்த்தி என்றால் நேர்ந்து கொள்ளுதல் (பிராத்தனை செய்து கொள்ளுதல்) என்று விளக்கங் கூறினார். கருவூர் பொன் வாணிகன் நேர்ந்துகொண்டு அமைத்த அதிஷ்டானம் என்று பொருள் கூறுகிறார்.

திரு. ஐ. மகாதேவன், இரண்டாவது வரியின் முதல் மூன்று எழுத்தை நத்தி என்று படித்துள்ளார். படித்து 'கருவூர் பொன்வாணிகன் நத்தி அதிட்டானம்' என்று வாக்கியத்தை அமைக்கிறார். பிறகு, வாணிகன் +நத்தி என்பதை வாணிகன்+அத்தி என்று பிரித்துக் கருவூர் பொன் வாணிகன் அத்தியினுடைய அதிட்டானம் (இடம்) என்று பொருள் கூறியுள்ளார். கல்வெட்டில் வாணிகன் என்றும் நத்தி (?) என்றும் சொற்கள் தனித்தனியே பிரிந்துள்ளன. பிரிந்துள்ள சொற்களை இவர் பிரித்துக் காட்டுவது பொருந்தவில்லை. இவர் தவறாகப் படித்துள்ள ‘நத்தி’ என்னும் பெயர் புதுமையாக இருப்பதனால் நத்தியை அத்தி யாக்க எண்ணி, வாணிகன்+நத்தி = வாணிகன் அத்தி என்று எங்கும் இல்லாத இலக்கணத்தைக் கூறி, நத்தியை அத்தி ஆக்குகிறார்.

மகாலிங்கமும் மகாதேவனும் இரண்டாம் வரியின் முதல் சொல்லை நேர்த்தி என்றும் நத்தி என்றும் படித்தார்கள். காரணம் முதல் எழுத்து பொளிந்துபோய்ச் சரியாக உருத்தெரியாமலிப்பதுதான். இரண்டு வாசகமும் பொருத்தமாகத் தோன்றவில்லை. பொளிந்துள்ள முதல் எழுத்தைக் கூர்ந்து நோக்கினால் அது பொ என்னும் எழுத்து என்று தோன்றுகிறது. அடுத்துள்ள இரண்டு எழுத்துக்களையும் சேர்த்துப் படித்தால் பொத்தி என்றாகிறது. ஆகவே கருவூர் பொன் வாணிக னுடைய பெயர் பொத்தி என்பது தெரிகிறது. இந்த வாக்கியத்தைக் கருவூர்' பொன் வாணிகன் பொத்தி அதிட்டானம்' என்று படிப்பது சரி என்று தோன்றுகிறது.

விளக்கம்: பொத்தன், பொத்தி என்னும் பெயர்கள் சங்க காலத்தில் வழங்கி வந்தன. பொத்த குட்டன் என்னும் தமிழன் இலங்கையிலே செல்வாக்குள்ளவனாக இருந்தான். அவன் தான் விரும்பியவர்களை இலங்கையின் அரசராகச் சிம்மாசனம் ஏற்றினான் என்று குலவம்சம் என்னும் நூல் கூறுகிறது. சங்க காலத்தில் பொத்தியார் என்று புலவர் ஒருவர் இருந்தார். அவருடைய செய்யுள்கள் புறநானூற்றில் (புறநா. 217, 220, 221, 222, 223) தொகுக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தக் கல்வெட்டின் இரண்டாவது வரியில் உள்ள முதல் மூன்று எழுத்தையும் பொத்தி