உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

பட்டும் மூங்கிலும்

167

ஆதிகாலத்தில் சீனதேசத்தார் மூங்கிற்பட்டைகளின் மேலே எழுதிவந்தனர். பிறகு, பட்டுத் துணி நெய்யும் தொழில் சீன தேசத்திலே தோன்றிற்று. அப்போது அவர்கள் பட்டுத்துணிகளை எழுது கருவியாகக் கொண்டனர். துகிலிகையினால் (பிரஷினால்) மையைத் தொட்டு ஓவியம் எழுதுவதுபோல, அவர்கள் பட்டுத் துணியிலும், மூங்கிற்பட்டையிலும் எழுதிவந்தார்கள். பிறகு, காகிதம் செய்யும் முறையையும் அவர்களே கண்டுபிடித்தார்கள். அப்போது காகிதத்தில் எழுதும் பழக்கம் ஏற்பட்டது. அதனால் காகிதத் தொழிற்சாலைகள் சீன நாட்டில் ஏற்பட்டன.

காகிதத்தில் அச்சடிக்கும் முறையையும் சீனர்களே கண்டு பிடித்தார்கள். ஆனால், தனித்தனி அச்செழுத்துக்களை அவர்கள் உண்டாக்கவில்லை. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் மரப் பலகையில் எழுத்துக்களைச் செதுக்கி அச்சிட்டார்கள். ஆகவே, ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒவ்வொரு மரப்பலகை எழுத்துக்கள் செதுக்கி அச்சிடப்பட்டன.

ஓலைச் சுவடிகள்

எகிப்தியர், கிரேக்கர், ரோமர், யூதர் முதலிய இனத்தார் பண்டைக் காலத்தில் பேபரைஸ் தாளையும், விலங்குகளின் தோல்களையும் எழுதுகருவியாக வழங்கி வந்த காலத்தில், நமது நாட்டார் பனையோலையினால் செய்யப்பட்ட ஓலைச் சுவடிகளில் நூல்களை எழுதிவந்தார்கள். பனையோலைகளை ஒரே அளவாக நறுக்கி, ஒன்றாகச் சேர்த்து, இரண்டு மரச்சட்டங்களை இருபுறங்களிலும் நீண்ட பக்கமாக அமைத்து, அவைகளினூடே இரண்டு துளைகளை அமைத்து கயிறுகொண்டு சுற்றிக் கட்டிய சுவடிகள் தாம் ஓலைச்சுவடிகள். இப்பனையோலை ஏடுகளில் இரும்பினால் அமைந்த எழுத்தாணிகளினால் வரைவார்கள். ஓலைச் சுவடிகளைப்பற்றி எல்லோரும் அறிந்திருப்பார்கள். ஆகையால், அதைப் பற்றி அதிகமாக எழுத வேண்டியதில்லை. இத்தகைய ஓலைச் சுவடிகள்தாம் இந்தியா, பர்மா, இலங்கை முதலிய கீழை நாடுகளில் முற்காலத்தில் வழங்கிவந்தன.