உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

137

காவியத்துக்கு (சிலப்பதிகாரத்துக்கு) முன்பே கண்ணகி வரலாறு தோன்றி வளர்ந்துள்ளதெனக் கருதுதல் தகும்” என்று வையாபுரி யாரும் நீலகண்டரும் கூறுகிறார்கள். இவர்கள் இவ்வாறு கூறுவதற்கு ஆதாரம் எங்கே? சான்று எங்கே உள்ளது?

ஆரிடம் என்றால், இருடிகள் வாக்கு என்பது பொருள். ஆரிடச் செய்யுள்கள் எல்லாம், சிலப்பதிகாரக் காலத்துக்கு முன்புதான் இயற்றப் படும், அதற்குப் பிற்காலத்தில் இயற்றப்படமாட்டா என்று இவர்கள் எங்கே கண்டார்கள்? சிலப்பதிகாரக் காலத்துக்குப் பின்பு ஆரிடச் செய்யுள்கள் இயற்றப்படக் கூடாது என்று எங்கேனும் கட்டளையோ நியதியோ உண்டா? இதற்கு ஆதாரம் காட்ட முடியுமா?

சாஸ்திரியாரும் பிள்ளையும் ஒன்று சேர்ந்துகொண்டு எதை எதையோ காரணங்காட்டி எழுதுகிறார்கள். அவலை நினைத்துக கொண்டு உரலை இடிக்கிறார்கள். அவர்கள் காட்டும் சான்றுகள் போலிச் சான்றுகளாய், அவர்களுக்குத் துணைசெய்யவில்லை. மாறாகவே காணப்படுகின்றன.

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கட்டுக்கதைகள், சரித்திர சம்பந்தம் இல்லாத புனைகதைகள், மிகப் பிற்காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் - என்பதை எப்படியாவது நிலைநாட்டவேண்டும் என்பதுதான் பிள்ளையும் சாஸ்திரியாரும் கொண்ட நோக்கம். இக்கருத்தை அடிப் படையாகக் கொண்டுதான் இவர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை எழுதி யிருக்கிறார்கள். ஆராய்ச்சி என்பது, ஏற்கனவே ஒரு கருத்தை எண்ணிக்கொண்டு, அதற்கு ஏற்பச் சான்றுகளைத் தேடுவதுஅல்ல. சான்றுகள் காட்டுகிற வழியே சென்று அவை காட்டுகிற முடிவைக் காண்பதுதான் ஆராய்ச்சி. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பிற் காலத்து நூல்கள் என்று சான்றுகள் காட்டுமானால், அதை யாவரும் ஏற்றுக்கொள்வர். ஆனால், அச்சான்றுகள் உண்மையான உறுதியான நேர்மையான சான்றுகளாக இருக்க வேண்டும்; ஆதாரம் அற்ற போலிச் சான்றுகளும் உண்மைபோல் தோன்றுகிற பொய்ச் சான்றுகளுமாக இருக்கக் கூடாது.