உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. கண்ணகியார் தெய்வமான இடம் எது? *

பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனோடு கண்ணகியார் வழக்காடிப், பாண்டிமா தேவியின் சிலம்பைக் களவாடிய தாகக் கோவலன்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது, அவன் கள்வன் அல்லன், அவனைப் பாண்டியன் கொன்றது அநீதி யானது என்று சான்று காட்டி நிறுவி வழக்கை வென்றபிறகு அவர் மதுரை நகரத்தை விட்டு வெளியேறினார். வெளியேறுவதற்கு முன்பு கொற்றவை கோயில் வாயிலில் தம்முடைய கைகளில் அணிந்திருந்த சங்கு வளையல்களை உடைத்துக் கைம்மைக் கோலம் பூண்டார். அந்த இரவிலே மதுரைக் கோட்டையின் மேற்கு வாயில் வழியாக வெளியேறித் தன்னந் தனியே வைகையாற்றின் கரை வழியே மேற்கு நோக்கி நடந்தார். மரணமடைந்த தம்முடைய கணவனைக் காண்பதற்கு முன்னர் இருப்பதுமில்லை நிற்பதுமில்லை உறங்குவதுமில்லை என்று உ றுதி செய்துகொண்டு இரவு பகலாகத் தாம் எங்குச் செல்கிறார் என்ற குறிக்கோளில்லாமல் நடந்தார். அதாவது, தாமும் உயிர்விட்டு, விண்ணுலகஞ் சென்ற தம்முடைய கணவனை அடைவது என்று முடிவு செய்துகொண்டார். ஆனால், தற்கொலை செய்துகொண்டு உயிர் விடுகிற வில்லை. ஆகையால், ஓயாமல் நடந்து கொண்டே யிருப்பது, எங்கு உயிர் பிரிகிறதோ அங்கு உயிர் விடுவது என்று முடிவு செய்துகொண்டு கண்ணகியார் வைகையாற்றின் கரை வழியே தம்முடைய இறுதிப்பயணத்தை மேற்கொண்டார்.

“கருத்துறு கணவற் கண்டபின் அல்லது இருந்தலு மில்லேன் நிற்றலும் இலனெனக் கொற்றவை வாயில் பொற்றொடி தகர்த்துக் கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேல் மேற்றிசை வாயில் வறியேன் பொய்கென இரவும் பகலும் மயங்கினள் கையற்று உரவுநீர் வையை ஒருகரைக் கொண்டாங்கு

(கட்டுரை காதை 179-185)

வ. சுப்பையா பவழ விழா மலர் : 1973.