பக்கம்:மருதநில மங்கை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை137


பொற் சதங்கைகள் ஒலிக்க ஆடும் அவன், அவள் கண்ணிற்கு யானை போன்றே காட்சி தந்தான். மென்மை வாய்ந்த அவன் தலையில் கிடந்து அலையும் முக்காழ் வடம் இளைய களிற்றின் மத்தகத்தில் கிடந்து அசையும் ஓடைபோல் காட்சியளிக்கக் கண்டுகளித்தாள். “இளம் சிறுவர்களை இன்னல் இன்றிக் காக்க!” என வேண்டிச் செவிலித் தாயர் அவ்விறைவன் படைக்கலங்களாய வாள், மழுப்போலும் வடிவங்களாக ஆக்கி அணிந்த அணிகளை, அவன் வாயினின்றும் ஒழுகும் எச்சில் நனைக்கும் காட்சியை நின்று நோக்கிக் களித்தாள்.

மனத்தைக் கவரும் மகனின் அழகிய கோலத்தைக் கண்டு, அவள் மகிழ்ந்திருப்புழி, பரத்தை வீடு சென்றிருந்த அவள் கணவன் வந்து மனை புகுந்தான். அவன் வரவைக் கண்ட அவள், அவன் ஒழுக்கக் கேட்டை உணர்த்தி, அவனைத் திருத்த எண்ணங்கொண்டாள். அதற்கு உற்ற துணையாய்த் தன் மகனைக் கொள்ள விரும்பினாள். உடனே, வந்த கணவனைக் காணாதாள் போல் எழுந்து சென்று, தெருவில் ஆடி மகிழும் மகனை அழைத்து வந்தாள். வந்து கணவன் கேட்கும் அண்மையில் ஓரிடத்தே அமர்ந்தாள். மகனை மடிமீது இருத்தி அணைத்துக் கொண்டவாறே, “மகனே! நீ உன் தந்தையின் வடிவே உன் வடிவாய், அவன் வனப்பே உன் வனப்பாய்க் கொண்டு விளங்குகின்றனை. அழகிய அவ்வடிவும் வனப்பும் கண்டு நான் மகிழ்கிறேன். ஆனால் உன் தந்தையின் குணங்கள் அனைத்தையும் அவ்வாறே பெற்று விடுதல் கூடாது. உன் தந்தைபால் காணலாம் பண்புகளில் கொள்ளலாம் பண்புகள் எவை, தள்ளலாம் பண்புகள் எவை என்பதை என்பால் அறிந்து மேற்கொள்வாயாக. மகனே! தன்னோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/139&oldid=1130008" இலிருந்து மீள்விக்கப்பட்டது