பக்கம்:மருதநில மங்கை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138புலவர் கா. கோவிந்தன்


பகைத்த பகைவர்களைப் பாய்ந்து அழித்து, வென்று களம் கொள்ளும் வெற்றிச் சிறப்பு உன் தந்தைபால் உளது. அதை நீ பெற்றுக்கொள். இவர் நமக்கு வேண்டியவர்; ஆகவே பிழைபுரியினும் போக விடுக; இவர் நம் பகைவர்; ஆகவே இவர்பால் பிழையில்லை எனினும் பிடித்து ஒறுக்க எனக் கருதும் முறை கேடறியாது, வேண்டுவார்க்கும், வேண்டார்க்கும் ஒரே நீதி வழங்கும் செங்கோல் நெறி நிற்பவன் உன் தந்தை. அச்செங்கோற் சிறப்பினைச் சிறிதும் நழுவவிடாது அவ்வாறே பெற்றுக்கொள். தன்பால் வந்து, தம் வறுமை நிலை நாட்டி இரந்து நிற்பார்க்குப், பொருள்களை வாரி வாரி வழங்கி, அவர் வாட்டத்தைப் போக்கும் வள்ளல் உன் தந்தை. அவ்வண்மைக் குணத்தை வழுவாது பெறுதல் உன் விழுமிய கடனாம். உன் தந்தை பால் காணலாம் கொள்ளலாம் குணங்களைக் கேட்டறிந்து கொண்ட நீ, அவன்பால் காணலாம் தள்ளலாம் குணங்கள் இன்னின்ன என்பதையும் கூறுகிறேன், கேள். மகனே! உன் தந்தையின் செங்கோற் சிறப்பை அறிந்து, செந்நெறி நிற்கும் இவன் நம்மைச் சீரழிய விடான்’ என நம்பி, மனம் ஒன்றிய காதல் கொண்ட மகளிர், காற்றால் அலைப்புண்ட மலர்போல், மென்தோள் தளர்ந்து, மனநோய் மிகுந்து வருந்துமாறு விடுத்து மறந்து வாழும் கொடுமையில் குன்றென நிற்பன் உன் தந்தை. அந்த ஒரு கொடுமை உன்னைக் குறுகாதொழிக!” எனக் கூறத் தொடங்கினாள்.

தாய் கூறும் அறவுரைகளை அமைதியாக இருந்து கேட்டுவந்த அவன், தாயின் பின்வந்து நிற்கும் தந்தையைப் பார்த்து விட்டான். பலநாள் பாராதிருந்த தந்தையைப் பார்த்து விட்டமையாலோ, அல்லது தந்தையை வைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/140&oldid=1130009" இலிருந்து மீள்விக்கப்பட்டது