பக்கம்:மருதநில மங்கை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை139


கொண்டே அவனைத் தாய் குறை கூறியதாலோ, அவன் தந்தையைக் கண்டு நகைக்கத் தொடங்கினான். மகனின் நகைமுகம் கண்ட அவள், “தக்க இன்ன, தகாதன இன்ன என நான் அறிவுரை கூறிக் கொண்டிருக்க, மகன் எனப் பாராட்டற்குரிய மாண்பு சிறிதும் இல்லாதான் பெற்ற இம்மகன், யாரைப் பார்த்து நகைக்கிறான்?” என்று கடிந்து கொண்டே, பின்புறம் நோக்கினாள். நோக்கினவள் ஆங்குக் கணவன் நிற்கக் கண்டு, “இதுகாறும் எங்கோ சென்று மறைந்து வாழ்ந்த இவர்தாமோ, இப்போது ஈங்கு வந்திருப்பவர்!” எனக் கூறி எள்ளினாள்.

மனைவியின் மனநிலையும் சினநிலையும் கண்டு நடுங்கிய இளைஞன், “பெண்ணே உனக்கு நான் அறியச் செய்த தவறு எதுவும் இல்லையே! அவ்வாறாகவும் என்னைக் கொடுமை கூறுவது ஏனோ? மகனைக் கட்டிப் பிடித்துக் கொள்ளாது என் கையில் கொடுப்பாயாக!” எனக் கேட்டுத் தன் இரு கைகளையும் ஏந்தி நீட்டினான். தந்தை கை நீட்டக் கண்ட அம்மகன், மலைமீது பாயும் சிங்கம் போல், அவன் மார்பில் பாய்ந்து பற்றி ஏறிக்கொண்டான். அணைத்து அடக்கவும் அடங்காது, மகன் கணவன் மார்பைப் பாய்ந்து பற்றிக் கொண்டானாகவே, செயலற்ற அவள், “மனைவியையும், மகனையும் கைவிட்டு வாழும் கடையன் இவன்! மனைவியாலும் மகன்பாலும் அன்பு காட்ட மறந்த கொடியன் இவன்! ஆகவே இவன்பால் செல்லற்க என நான் விலக்கவும், அதை ஏற்றுக் கொண்டு அச்சொல் வரையில் நிற்காது, அவன்பால் சென்று விட்டான் இவன். அவன் பெற்ற இவன்பாலும், அவனுக்குரிய பண்பே பொருந்திவிட்டது போலும். நான் என் செய்வேன்?” என்று கூறி அப்பாற் சென்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/141&oldid=1130011" இலிருந்து மீள்விக்கப்பட்டது