பக்கம்:மருதநில மங்கை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148புலவர் கா. கோவிந்தன்


பரத்தைபால் கொண்ட வேட்கை மிகுதியால், மனைவியின் அன்பைப், பிழை காணப்பொறா அவள் உள்ள உறுதியை மறந்திருந்த அவன், அவ்வேட்கை தீர்ந்தவுடனே, அவ் அன்பும் உறுதியும், அவன் உள்ளத்தைத் துயர் செய்யவே, அஞ்சித் தன் மனை புகுந்தான்.

அஞ்சி அஞ்சி மனை புகும் அவனை மனைவி கண்டாள். தொலைவில் வரும்போது, அவன் தோளில் மலரிதழ்கள் சில உதிர்ந்து கிடப்பதைக் கண்டாள். அவை, அவன் புணர்ந்த பரத்தையின் மணம் நாறும் மயிர் முடியில் சூட்டிய மாலையினின்றும், அவளும் அவனும் புணருங்கால், காம்பற்று உதிர்ந்தவையே என்பதை உணர்ந்து உள்ளம் வருந்தினாள். அந்நிலையில், அவன் அவளை அணுகினான். அண்மையில் வந்து நிற்பானை அவள் உற்று நோக்கினாள். அவன் மேனியில் புதிய வடுக்கள் பல விளங்குவதைக் கண்டு வருந்தினாள். அருகில் வந்து தன்னைத் தொட்ட அவன் கைகளை விரைந்து அகற்றினாள். “பூங்கொடி போன்ற மெல்லிய இயல்பு வாய்ந்த பரத்தையின், மயிர் முடியில் சூட்டிய மலர்களின் இதழ்கள், உன் தோளில் உதிர்ந்து கிடக்க, அக்காட்சியோடு சங்கு வந்து என்னைத் தொடும் நீ யார்? உனக்கும் எனக்கும் என்ன உறவு? என்னைத் தொடாதே! அகன்று போ. கணவனைப் பிரிந்து கலங்கி நிற்கும் எளியராகிய மகளிர், தம் மனைவியர் வருந்தக் கண்டும் மனம் கலங்காது பிரியவல்ல பெரியோராகிய ஆடவர்க்கு அடிமையாவரோ? ஆகார்! இதை அறிந்து அகல்க!” என்று வெறுத்துக் கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/150&oldid=1130022" இலிருந்து மீள்விக்கப்பட்டது