பக்கம்:மருதநில மங்கை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை167


வந்து நோக்க, அக்காலை, நீ மற்றொருத்தியின் மனை சென்று மகிழ்ந்திருந்தமையால், ஆண்டுக் காணாது கலங்கிய ஒரு பரத்தை, உன்னைப் பிறிதோரிடத்தில் கண்டு, உன்னோடு ஊடிப் புலந்தக்கால், அவள் கூரிய உகிர்பட்டு உன் மார்பில் உண்டான வடுவையும், அவள் பற்றிப் பாழாக்கப் பாழான உன் மாலையையும், அவள் கலைக்கக் கலைந்த மார்புச் சந்தனத்தையும், மற்றும் சேரியில் வாழும் செவ்வரி பரந்த செருக்கோடு மை தீட்டிய மாண்பும் வாய்ந்த கண்களையுடைய பரத்தையர் பலரும், உன்னைப் பலகாலும் புணர்ந்தமையால் பாழான உன் மேனியையும் கண்டேன். இத்தகையான் நமக்கு இன்பம் தருவதற்கு ஏற்றவனாகான் என உணர்ந்தது என் உள்ளம். ஆகவே, உன்னோடு ஊடுவதைக் கைவிட்டேன். ஆகவே, இனி என்னைக் கண்டு அஞ்சாது, நீ விரும்பும் இடத்திற்குச் சென்று மகிழ்ந்து வாழ்வாயாக!” எனக் கூறி வெறுத்து அப்பால் சென்றாள்.

மனைவி தான் செய்த தவறுகளை வரிசையாக எடுத்துக் காட்டி இடித்துரைப்பதைக் கண்ட இளைஞன், எதையும் கூறுவதற்கு இயலாது சிறிது நேரம் விழித்தான். பின்னர்ப், “பிழை புரிந்திலேன்” என்ற தன் பொய்யை நிலை நாட்டுவதே வழியாம் எனத் துணிந்தான். அதனால் மீண்டும் அவளை அணுகிப், “பெண்னே! பிழையற்றவன் நான் எனப் பலகால் கூறவும், அதை ஏற்றுக் கொள்ளாது மேலும் மேலும் என்னைச் சினந்து வெறுக்கின்றாய். இனி, உன்னைப் பணிந்து, உன் உள்ளம் ஏற்கும் சொற்களால், என் தவறின்மையைக் காட்டத் துணிந்தேன். அதை இனிக் காண்பாயாக!” எனத் தோற்றுவாய் அமைத்துக் கொண்டு, தொடரத் தொடங்கினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/169&oldid=1130128" இலிருந்து மீள்விக்கப்பட்டது